சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்கா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்தால், கடந்த 2022ஆம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த வன உயிரியல் பூங்கா என்று மதிப்பிடப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில். 170 வகைகளைச் சேர்ந்த ஆயிரத்து 977 வன விலங்குகள் உள்ளன. மேற்கு, கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி 28ஆம் தேதி, கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
குரங்குகளை மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக, பூங்காவில் உள்ள விலங்குகள், மருத்துவமனைக்கு அருகில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கம்போல் பராமரிப்புப் பணியில் இருந்த பணியாளர்கள் குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்து, காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள், வனக் காப்பாளர்கள் உதவியுடன், மாயமான குரங்குகளைத் தேடி வந்தனர்.
இதனையடுத்து, தப்பி ஓடிய 2 அனுமன் குரங்குகள் ஊரப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவதாக பொதுமக்கள், பூங்கா ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், நேற்று (பிப்.15) மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள், குரங்குகளை நவீன துப்பாக்கிகள் மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், குரங்குகள் உயரமான மரக்கிளைகளில் அங்கும் இங்கும் தாவிச் சென்றதாலும், மாலை நேரம் என்பதாலும், குரங்குகளைப் பிடிக்க முடியாமல் ஊழியர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று (பிப்.16) காலை மீண்டும் அப்பகுதியில் குரங்குகளை தேடும் பணியில் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக குரங்குகள் தப்பியோடிய நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை.. கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா தகவல்!