ETV Bharat / state

“ED-க்கும் பயப்படமாட்டோம்.. மோடிக்கும் பயப்படமாட்டோம்..” - உதயநிதி ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 8:56 PM IST

Updated : Jan 22, 2024, 5:15 PM IST

இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Minister Udhayanidhi Stalin: இது இளைஞர் அணி அல்ல.. கலைஞர் அணி.. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என திமுக இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சேலம்: திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன.21) காலை தொடங்கி நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இது இளைஞர் அணி அல்ல கலைஞர் அணி என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “1944 இல் நீதிக்கட்சியாக இருந்து திராவிடர் கழகம் உதயமானது. இப்போது 80 ஆண்டுகள் கழித்து சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இளைஞரணி மாநாடு நடைபெற்றுள்ளது.

என்னுடைய வாழ்நாளில் ஜன.21 ஆம் தேதி மறக்க முடியாது. என் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல இந்த நாளை மறக்க முடியது. இளைஞரணி செயலாளராக 2019ல் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது.
இளைஞரணி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைப்போம். தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும்.

மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவைக் கலைக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் கையெழுத்து வாங்கிட இயக்கம் நடத்தியதில் சுமார் இதுவரை 85 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம். இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் பல்வேறு துறைகளை மத்திய அரசு வைத்துள்ளது. அதனை மாநில அரசின் வசம் மீண்டும் வழங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காலத்தில் மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் செலுத்தினால் 29 காசுகள் மட்டுமே மீண்டும் தமிழகத்திற்குக் கிடைக்கிறது. இதுவரை ரூ.5 லட்சம் கோடி வரி செலுத்தியதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

இதனால் மழை வெள்ள பாதிப்பின் போது உடனடியாக நிவாரண உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நாம் கேட்ட நிதியை இதுவரை நம் மொழி, வேலைவாய்ப்பு, அதிகார குறைப்பு, பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வி மட்டுமல்ல மற்ற அனைத்து கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளனர்.

தமிழ் மொழி நம் உயிர், தமிழை அழிக்க நினைத்தால் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம். 2 ஆயிரம் வருடங்களாக முயன்றும் தமிழரின் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தமிழனின் அடையாளத்தை அழிக்க முடியாது. அமலாக்கத்துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள். அமலாக்கத்துறைக்கும், மோடிக்கும் திமுகவினர் பயப்பட மாட்டார்கள்.

ஆனால், திமுக தலைவர்களை மட்டுமல்ல, திமுக தொண்டர் வீட்டுக் குழந்தையைக் கூட அமலாக்கத்துறையால் மிரட்ட முடியாது. திமுக என்றைக்கும் தொண்டர்களைக் கைவிட்டதில்லை. தொண்டர்களுக்குப் பாதிப்பு என்றால் தலைவரே களத்தில் இறங்கிப் போராடுவார். திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்துள்ளது. இந்த இயக்கம் மேலும் ஒரு நூற்றாண்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்கும். ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும். 10 ஆண்டுக் காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிடிப்புடன் திமுக தொண்டர்கள் உள்ளனர். உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் என அனைத்து தரப்பினருடன் இணைந்து கை கோர்த்துக் கொண்டு ஒடி வருகிறோம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய (I.N.D.I.A) கூட்டணி வெற்றி பெற உள்ளது. முதல்வர் வழிகாட்டுதலின் படி தேர்தல் பணியாற்ற வேண்டும். இளைஞர் அணியினருக்கு ஒரு லட்சியம் உள்ளது. 2018ஆம் ஆண்டு கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, சாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொன்னார். பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றனவை நனவாக்கித் தருவதுதான் இளைஞரணியினரின் லட்சியம்.

இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூசச் செய்யும் பாசிச பாஜகவை அகற்றுவதே அதற்கான முதல் பணியாகும். இளைஞர் அணியினருக்கு நிறையப் பொறுப்புகள் கொடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது இளைஞர் அணியல்ல, கலைஞர் அணி ஆகும்” என கூறினார்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அசைவ உணவுகளுக்கு அசாம் மாநிலம் தடை!

Last Updated :Jan 22, 2024, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.