ETV Bharat / state

''இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என பாஜக கூறுவது எந்த வகையில் நியாயம்?'' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 10:07 PM IST

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என பாஜக கூறுவது எந்த வகையில் நியாயம்?

Minister TRP Raja criticized BJP: பாஜக ஆட்சிக்கு வந்து 3500 நாட்களுக்கு மேலாகி விட்டது, இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்பது எந்த வகையில் நியாயம்? என கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியுள்ளார்.

கோயம்புத்தூர்: எங்களுக்குப் போட்டி அதிமுகவுடன் தான், அதனை ஊடகங்கள் மறைக்கின்றன, கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியுள்ளார். கோவை அவினாசி சாலை, பீளமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் பணிமனையில், கோவைக்கான தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று (ஏப்.16) வெளியிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள வாக்குறுதியில், கோவையில் உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படும், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும், குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும், ஜிஎஸ்டி பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அல்ல, இந்த போரில் மகத்தான வெற்றி பெறுவோம். திமுகவின் அற்புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகி உள்ளது. பல்வேறு மக்களின் கருத்துக் கேட்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

புதிய விடியல், புதிய உதயம் கோவைக்கு வர வேண்டும்: கோவைக்காகத் தனித்துவமான தேவைகள் மற்றும் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை வைத்து கோவைக்கு என தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு திமுக அரசு. அமைய உள்ள ஒன்றிய அரசிலும் திமுகவின் பங்கு இருக்கும்.

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிகின்றன. புதிய விடியல், புதிய உதயம் கோவைக்கு வர வேண்டும். அடுத்தகட்ட பிரமாண்டமான வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம். அடுத்தகட்ட பரிமாணத்திற்கான அடித்தளமிடுகிறோம். சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக சொன்னதைச் செய்ததாகச் சரித்திரம் இல்லை: பாஜக ஆட்சிக்கு வந்து 3500 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்பது எந்த வகையில் நியாயம்? இப்படிச் சொல்ல பாஜகவிற்கு தகுதியில்லை. பாஜக சொன்னதைச் செய்ததாகச் சரித்திரம் இல்லை. வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகத் தோல்வி பயத்தில் பல புகார்கள் வரத்தான் செய்யும்.

மத்திய அரசின் நிதி எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை என அண்ணாமலை சொல்வது முட்டாள்தனம். அவர் சொல்வது பொய், அவர் தூங்கிக் கொண்டு இருக்கிறார், முழித்துக் கொள்ள வேண்டும். எங்களுக்குப் போட்டி அதிமுகவுடன் தான். அதனை ஊடகங்கள் மறைக்கின்றன. கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது.

நாடே அவர்களுக்கு எதிராக உள்ளது: எந்த கருத்துக் கணிப்பு உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை. கணபதி ராஜ்குமார் மகத்தான வெற்றி பெறுவார். திமுக ஆட்சியில் வறட்சி காலத்திலும் முறையாகத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கிச் செயல்படுத்தும் ஒரே இயக்கம் திமுக தான். திமுக ஆட்சியில் தான் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி வருகிறது, புதிய மின் திட்டங்கள் வர உள்ளது.

பெட்ரோல் விலையை 3 ரூபாய் உண்மையாகக் குறைத்தோம். இவர்களைப் போல ஏற்றிவிட்டு பொய்யாகக் குறைக்கவில்லை. பாஜக செய்வதைத் தான் எல்லோரும் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். நாடே அவர்களுக்கு எதிராக உள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனையைப் பற்றிப் பேச திமுக தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை. இவ்விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்ட இயக்கம் திமுக தான். கோவையில் திமுக வரலாறு காணாத வெற்றி பெறும்”, என்றார்.

இதையும் படிங்க: "ஏப்.19ஆம் தேதி சரியான முடிவு எடுத்தால்.. ஜூன் 4ல் நமக்கு விடுதலை" - கமல்ஹாசன்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.