ETV Bharat / state

"பயப்படாமா சொல்லுங்க".. தனது பாணியில் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய அப்பாவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 1:31 PM IST

Sekar Babu at TN Assembly Session
அமைச்சர் சேகர்பாபு

Sekar Babu: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் சேகர் பாபுவின் பதிலால் அமைதியாக இருந்ததால், 'உறுப்பினர் அமிர்தராஜ் பயப்படாமா சொல்லுங்க' எனக் கூறிய அப்பாவின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சென்னை: நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இன்று நடைபெற்ற 4ஆம் நாள் அமர்வு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, கொங்கராயகுறிச்சியில் உள்ள வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா எனவும், கைலாசநாதர் திருக்கோயிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், தேரோட்டம் நடத்த ஏதுவாக புதிய தேர் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு 8 சன்னதிகள் உள்ள நிலையில், 8 சன்னதிகளுக்கும் தொல்லியல் துறை, மண்டல மற்றும் மாநிலக் குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் 5ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பின், 48 புதிய தேர்கள் ரூ.71 கோடி செலவில் உருவாக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், 48 திருக்கோயில்களில் தேர் மரம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கைலாசநாதர் கோயிலுக்கு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் தேர் உருவாக்க, உபயதாரர் நிதியை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினால், இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு அவரது பாணியில், ‘உறுப்பினர் அமிர்தராஜ் பயப்படாமல் சொல்லுங்கள்’ எனத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ், நமது அரசே முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.