ETV Bharat / state

வாக்களிக்கும் தமிழ்நாடு; ஜனநாயகக் கடமை ஆற்றிய தூத்துக்குடி அரசியல் பிரபலங்கள்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 10:54 AM IST

Updated : Apr 19, 2024, 11:04 AM IST

lok sabha election
நாடாளுமன்ற தேர்தல்

Thoothukudi Constituency: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தமாக வேட்பாளர் விஜயசீலன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதி, தூத்துக்குடி மக்களவை தொகுதி. இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 26 வாக்காளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 578 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 18 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 620 வாக்காளர்களும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 வாக்காளர்கள் என மொத்தம் ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 வாக்காளர்கள் என இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இதில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 244 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 720 பெண் வாக்காளர்களும், 10 ஆயிரத்து 251 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 215 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்கின்றனர். இதுதவிர இளம் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 983 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், 288 பதற்றமான வாக்குச்சாவடி உட்பட மொத்தம் ஆயிரத்து 57 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா (Webcam) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில், வாக்குப்பதிவு முழுவதும் பதிவு செய்து, மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பொருட்டு, அவர்களது வீட்டிலிருந்து வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து சென்றுவர இலவச வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளில் அவர்களுக்கு உதவிபுரிய, பணியாளர்கள் மற்றும் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளதால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களித்திட பந்தல் வசதி, பொது சுகாதாரத்துறை மூலம் உப்புக்கரைசல் பொடி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 288 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 265 மையங்களுக்கும் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, வாக்குப்பதிவினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா ஜீவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல, தங்கம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது மகனுடன் வந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து, ஜார்ஜ் ரோட்டில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமாகா வேட்பாளர் விஜயசீலன் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், துணை இராணுவப் படையினர் உட்பட 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்! - LOK SABHA ELECTION 2024

Last Updated :Apr 19, 2024, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.