ETV Bharat / state

"இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தலாக அமையும்" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 8:43 AM IST

Minister Durai Murugan
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி

Minister Durai Murugan: 2,500 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையை கண்டுபிடித்தவன், 'தமிழன்' எனக் கூறிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முரட்டுத்தனமான அரசியலை ஏற்க முடியாதெனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் திமுகவின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திருவள்ளூரில் நேற்று (பிப்.18) நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எஸ்.சுதர்சனம், திருத்தணி எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதனால், இவ்வளவு சீக்கிரம் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் உரைக்கு பதில் அளிக்கும் போது, 2 தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பாசிசத்தை உள்ளடக்கியது என்பதால் அதை எதிர்ப்பதாகும். மற்றொன்று நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல், உரிமையைப் பெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் தீர்மானமாகும்.

தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும். இந்தியா என்பது பல்வேறு மொழிகள், பழக்கவழக்கம் கொண்ட நாடாகும். கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையை கண்டுபிடித்தவன், 'தமிழன்'. அதனால், இதனை ஏற்க முடியாது. இரண்டாவது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதியை கூட்டுவது, குறைப்பதையும் ஏற்க முடியாது என முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதை சட்டப்பேரவையில் அனைத்து கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் கூட தீர்மானத்துக்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில், ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிமையான தீர்மானத்தை நிறைவேற்றினார்.

பிரதமர் மோடி காங்கிரஸில் இருப்பவர்கள், 'வாரிசு அரசியல்' செய்வதாக பேசி வருகிறார். பாரம்பரியமான குடும்பங்களில் இருந்து வந்தவர்களைப் பார்த்து வாரிசு அரசியல் செய்கிறார் என்பதை ஏற்க முடியாது. இவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்துதான் பதவிக்கு வந்தவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அதேநேரத்தில், பிரதமர் பதவி சோனியா காந்திக்கு தேடிவந்த போது அதை உதறித் தள்ளிவிட்டு, மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதியிலும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தலாக அமையும்" என்று பேசினார்.

கூட்டம் முடிவில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர மன்றத் தலைவரும், மாவட்ட துணைச் செயலாளருமான உதயமலர் பாண்டியன் ஆகியோர் நன்றி கூறினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை, பெண்கள் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் நான்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.