ETV Bharat / state

மு.க.ஸ்டாலினை 'வாரிசு அரசியல்' செய்வதாக விமர்சிப்பவர்களுக்கு துரைமுருகன் புதிய விளக்கம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 11:31 AM IST

அலட்சியமாக இருக்கும் தொண்டர்களுக்கு துரைமுருகன் எச்சரிக்கை
அலட்சியமாக இருக்கும் தொண்டர்களுக்கு துரைமுருகன் எச்சரிக்கை

Minister Duraimurugan: மிசா சட்டத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு சிறை சென்றதாகவும்; இது போன்று வாரிசு அரசியல் என விமர்சிக்கும் யாரும் இதுபோல தியாகம் செய்திருந்தார்களா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் காட்பாடியில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வட மாநிலங்களில் பாஜக ஆதரவு கிடைக்காது என்பது ஊடகம் மூலம் தெரியவருகிறது.

பாஜக கொள்கையைப் பற்றி பேசாமல் வாரிசு அரசியல் என சொல்லி தேர்தலை சந்தித்து வருகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார். அவர் ஆணாக இருந்தால் பிள்ளை பெற்றுக் கொள்கிறார். தனது தந்தை போல் அரசியலுக்கு வந்தால் அது வாரிசு அரசியலா? சில பேர் கல்யாணம் செய்து கொள்வதில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது.

வாரிசாக இருக்கலாம் தவறில்லை. ஆனால் அவன் வார்த்தெடுத்த சிற்பம் போல், தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு மிகப்பெரிய செல்வந்தராக வளர்ந்தவர். அவர் 16 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தார்.

அவருக்குப் பிறந்த மகள் இந்திரா காந்தி பாதுகாப்பு வீரரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வைத்து சுக்குநூறாக சிதறடிக்கப்பட்டார். அந்த குடும்பமே சிதைந்து போனதே, இதெல்லாம் வாரிசு அரசியலா? அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சோனியாவை பிரதமராக்குவோம் என்று நாங்கள் (திமுக) கூறினோம். அப்போது, தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்றாரே, அது தியாகம் அல்லவா?' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'அதேபோல், கருணாநிதி போராடவில்லையா? தண்டவாளத்தில் தலையைவைத்து போராடவில்லையா? கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவில்லையா? அவருடைய மகன் மிசாவில் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனைகள் அனுபவித்தார். அப்படி தியாகம் செய்தவர்தான் இன்று தமிழக முதலமைச்சராக உள்ளார்.

இதைபோல, தியாகம் செய்தவர்கள் உங்கள் கட்சியில் (பாஜக) உள்ளார்களா? மிசாவின் போது வாஜ்பாய் சிறையில் இருந்தார். அதற்குப் பிறகு யாராவது தியாகம் செய்தவர்கள் இருந்தார்களா? மோடி இருந்தாரா? அமித்ஷா இருந்தாரா?' எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நான் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று அவர் கூறியது வருத்தமளிக்கிறது. பத்தாண்டு காலம் நாம் (திமுக) வனவாசத்தில் இருந்தோம். யாரும் பஞ்சாயத்து போர்டில் கிடையாது, தலைவர் கிடையாது, எதிலும் கிடையாது.

இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு, ஊருக்கு ஊர் தலைவர், கவுன்சிலர் ஒவ்வொரு பொறுப்பிலும் உள்ளோம். இது நாம் ஆட்சிக்கு வந்ததால்தான் சாத்தியம். ஆனால் தற்போது, டெண்டரை என் பெயரில் எடுப்பதா? உன் பெயரில் எடுப்பதா? என நம்மிடையே சண்டை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதியில் உள்ளேன். இந்த பகுதியில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளும் எனக்குத் தெரியும்.

குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அளவுகோலாக அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம். இந்த முறை, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால், நம்மிடம் வைத்துக் கொள்ள காத்திருப்பார்கள்.

ஆனால், அதில் நாம் கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டால், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் நம்மை கொட்டிப்பார்க்கும் தைரியம் அவர்களுக்கு வந்துவிடும். பிறகு மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பஞ்சாயத்து போர்டு தலைவர் கூட இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

உண்மையான தியாகம் புரிகிற கட்சித் தொண்டன் ஊருக்கு பத்துபேர் இருந்தால் போதும். இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்யும் சாமர்த்தியம் எனக்கு உண்டு. சிலர் அலட்சியமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். யார் சரியாக இல்லையோ? அவர்களை நான் நீக்கி விடுவேன். நான் யாரையும் கேட்க வேண்டியது இல்லை. வீரனாக ஒருவன் இருந்தால் போதும்; கோழையாக 30 பேர் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் நாளை சென்னையில் இருப்பேன்.. பிரதமர் மோடி தமிழில் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.