ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Panel to monitor chidambaram temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 10:56 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் உத்தர
சிதம்பரம் நடராஜர் கோயில் பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும்

Chidambaram temple: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்த முடிவுகளை எடுக்க அமைக்கப்பட உள்ள நிபுணர் குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்க முன்வந்த சென்னை உயர் நீதிமன்றம், குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி, மனுதாரர்கள் மற்றும் அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்.10) விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வந்த நிலையில், கடந்த ஆண்டு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்துள்ளதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கோயிலின் மூன்று பிரகாரங்களிலும் கலையை மறைக்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ராஜகோபுரம் அருகில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளதாகவும், இது ராஜகோபுரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கட்டுமானங்கள் அனைத்தும் கோயில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது என்று சுட்டிக் காட்டினார். மேலும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நிரந்தர நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும், கோயிலின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிக்கத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு மூன்று வாரக் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க அமைக்க வேண்டிய நிபுணர் குழுவில் இடம்பெற வேண்டிய நிபுணர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி, மனுதாரர் தரப்புக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு: காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Chidambaram Nataraja Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.