ETV Bharat / state

பவானி ஆற்றில் மிதந்த உடல்.. மீட்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - MAN DOING YOGASANAM IN WATER

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 2:31 PM IST

Mettupalayam Deadbody issue: கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்து கிடந்த இளைஞரின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்கச் சென்ற போது, தண்ணீரில் மிதந்த அந்நபர் திடீரென எழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பவானி ஆற்றில் மிதந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்கும் புகைப்படம்
பவானி ஆற்றில் மிதந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்கும் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இன்று (மே 12) நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இளைஞரின் உடல் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு, அரை நிர்வாண நிலையில் உடலில் அசைவு எதுவும் இல்லாமல் இளைஞர் ஒருவர் நீரில் மிதந்து கிடந்துள்ளார். இந்நிலையில், அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என எண்ணிய போலீசார் உடலைக் கைப்பற்ற தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு ஆற்றின் கரையோரப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆற்றில் மிதந்த இளைஞரின் உடலை கையால் தூக்க முயற்சித்த போது, திடீரென ஆற்றில் மிதந்து கொண்டிருந்த இளைஞர் ஆம்புலன்ஸ் ஊழியரின் கையை தட்டிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்த நிலையில், என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த இளைஞர் மது போதையில் இப்படி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பதும், குடிபோதையில் ஆற்றில் யோகாசனம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ‘மனிதன்’ பட பாணியில் விபத்து ஏற்படுத்திய வடமாநிலப் பெண்.. சென்னையில் நடந்தது என்ன? - Manithan Movie Real Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.