ETV Bharat / state

‘மனிதன்’ பட பாணியில் விபத்து ஏற்படுத்திய வடமாநிலப் பெண்.. சென்னையில் நடந்தது என்ன? - Manithan movie real accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 1:49 PM IST

Chennai Accident: சென்னை அசோக் நகர் அருகே வீட்டி வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த பொதுமக்கள் காலின் மீது காரை ஏற்றிச் சென்ற வடமாநிலப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் கைது செய்யப்பட்ட பெண்
விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் கைது செய்யப்பட்ட பெண் (Credit - ETVBharat Tamil Nadu)

சென்னை: சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இட பற்றாக்குறை காரணமாக, உறவினர்கள் சிலர் வீட்டின் வாசலில் உள்ள சாலையில் உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்ற மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று, வீட்டு வாசலில் ஓரமாக உறங்கிக் கொண்டிருந்த உறவினர்களின் கால்களின் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த சாலை முட்டுச்சந்து என்று தெரியாமல் சென்ற வைஷாலி, வழி இல்லாமல் காரை நிறுத்தவே, அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சரிதா மற்றும் பிள்ளை நாயகி என்ற இரு பெண்களின் கால் எலும்புகளும் உடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வாறு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காரை இயக்கிய பெண் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதாகும் வைஷாலி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்த வைஷாலி கூகுள் மேப்பை பயன்படுத்தி வெளியே செல்ல முயன்ற போது தவறுதலாக இந்த விபத்து நடந்ததாகவும், அந்த சாலை முட்டுச்சந்து என்பது தனக்கு தெரியாது எனவும் வைஷாலி தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், காரை இயக்கிய அந்தப் பெண் மது போதையில் இந்த விபத்தை ஏற்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மார்கெட்டுக்குள் செல்ல முடியாதவாறு மணல் கொட்டி இடையூறு.. திருச்செந்தூர் வியாபாரிகள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.