மார்கெட்டுக்குள் செல்ல முடியாதவாறு மணல் கொட்டி இடையூறு.. திருச்செந்தூர் வியாபாரிகள் குற்றச்சாட்டு! - Tiruchendur Gandhi Market issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 12:41 PM IST

thumbnail
மார்க்கெட் வியாபாரிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் காந்தி தினசரி மார்கெட் செயல்பட்டு வருகிறது. இதில் 226 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் நகராட்சி சார்பில் மார்கெட் அருகே 152 புதிய கடைகள் கட்டி பொது ஏலம் விடப்பட்டுள்ளது. 

முன்னதாகவே, ஏற்கனவே சுமார் 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பழைய வியாபாரிகள் யாருக்கும் கடை வழங்காமல் பொது ஏலம் வழங்கப்பட்டதாகக் கூறி, அடுத்து வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.  

அப்போது நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உழவர் சந்தை கட்டி பழைய வியாபாரிகளுக்கு கடை வழங்குவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த நிலையில், மார்க்கெட் முழுவதும் சுற்று சாலை அமைப்பதாகக் கூறி, மார்க்கெட் நுழைவுப் பகுதியில் பெரிய பாறைக் கற்களை கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கற்கள் மற்றும் மணலை சமப்படுத்தாமல் பொதுமக்கள் மார்க்கெட் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இடையூறாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வியாபாரிகளை மார்க்கெட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக நகராட்சி நிர்வாகம் இரவோடு இரவாக கற்களை கொட்டி வைத்திருப்பதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும், மார்க்கெட் வழியில் மணலைக் கொட்டியுள்ளதால் மக்கள் யாரும் வருவதில்லை. இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், மார்க்கெட்டில் கொட்டப்பட்டுள்ள மணலை அகற்றாவிட்டால் திருச்செந்தூர் வியாபாரிகள் அனைவரும் நகர் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்தை கையில் எடுப்போம் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.