ETV Bharat / state

“கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்க வேண்டும்” - தேனியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! - Udhayanidhi Stalin in Theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 7:41 PM IST

Udhayanidhi Stalin: “கடந்தமுறை தேனியில் மட்டும் தான் தோல்வி அடைந்தோம், அதற்கு ஈடு செய்யும் விதமாக தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி தொகுதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தேனி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கடந்த முறை தேனியில் மட்டும் தான்.. இந்த முறை அதற்கு ஈடு செய்ய வேண்டும்

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தேனி பங்களாமேடு பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 23) தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, ஆண்டிபட்டிக்கு வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மாலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் அப்பகுதியில் திரண்டிருந்தது.

ஆனால், இரவு 10 மணியாகியும் அவர் வராததால், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்நிலையில், இன்று பிரச்சாரத்திற்கு வந்த அவர், நேற்று ராமநாதபுரம், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு பின்னர் தேனி வர காலதாமதமானதாக விளக்கமளித்து மன்னிப்பு கோரினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், “வரும் ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்களித்து, அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால், மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதிக்கு நான் வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்.

கடந்தமுறை தேனியில் மட்டும் தோல்வி அடைந்தோம், அதற்கு ஈடு செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி தொகுதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்ப்பவர் யாராக இருந்தாலும், நாம் வெற்றிபெற வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நாம் நுழைய விடவில்லை, ஜெயலலிதாவும் நீட் தேர்வை நுழைய விடவில்லை. ஆனால், அதன் பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி கூட்டம், நீட் தேர்வை நுழைய விட்டது. ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அடிமைக் கூட்டம், நீட் தேர்வை நுழைய விட்டதால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிஏஜி அறிக்கையில், ஒன்பது வருடத்தில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை. சாலை போடுவதில் முறைகேடு, மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. செய்வதை சொல்வோம், சொல்வதைச் செய்வோம் என கருணாநிதி வழியில் வந்தவர்கள் நாம்.

கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து உயர்ந்து 1,100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நமது தேர்தல் வாக்குறுதிப்படி, ஒரு கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும், பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும், டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக லண்டனில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. போடியில் 100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பகுதியில், 250 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 162 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாழை, திராட்சை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

வரும் ஜூன் 3 கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள், அதற்கடுத்த நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை. கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களது வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன், திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள். தங்க தமிழ்ச்செல்வனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என பேசினார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்.. ஏமாற்றத்துடன் திரும்பிய ஆண்டிபட்டி மக்கள்! - UTHAYANIDHI STALIN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.