ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்.. ஏமாற்றத்துடன் திரும்பிய ஆண்டிபட்டி மக்கள்! - UTHAYANIDHI STALIN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 12:45 PM IST

Udhayanidhi Stalin: தேனி ஆண்டிபட்டியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்காக வாக்கு சேகரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாமதமாக வந்ததால் பொதுமக்களும், தொண்டர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தேனியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
தேனியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

தேனி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி மற்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்த நிலையில், 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, திமுக தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்ட நிலையில், திமுகவின் முதல் தேர்தல் பிரசாரத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கினார்.

இதனையடுத்து, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதியில், நாளை முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் அவர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், 'இந்தியா' கூட்டணி (INDIA Alliance) வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, நேற்று ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை துவங்கினார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டார். பின்னர், தேனி மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, உசிலம்பட்டியில் தேவர் சிலை முன்பு தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கிடையில், ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மாலை 6 மணி முதல் ஆண்டிபட்டி பகுதியில் குவிந்துள்ளனர். ஆனால், இரவு 10 மணி ஆகியும் அமைச்சர் ஆண்டிபட்டிக்கு வரவில்லை.

இதனால், அப்பகுதியில், ஒலிபெருக்கிகளில் திமுக கட்சி பாடல்கள் ஒலிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நின்றிருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள் உத்தரவின் படி பாடல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆண்டிபட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரத்திற்கு இரவு 10 மணிக்கு மேல் அமைச்சர் வந்துள்ளார். இரவு, பத்து மணிக்கு மேல் தேர்தல் விதிப்படி, பிரசாரம் செய்யக்கூடாது என்பதால், பிரசார வாகனத்தில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றுவிட்டார்.

இதனால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரின் பேச்சை கேட்பதற்காக காத்திருந்த பொதுமக்கள் அமைச்சரின் பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் படிங்க: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி - TTV Dhinakaran Contest In Theni

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.