ETV Bharat / state

சித்திரைத் திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு! - Madurai Chithirai Festival

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 1:07 PM IST

Chithirai Festival: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடைவிதித்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Chithirai Festiva
சித்திரைத் திருவிழா

மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது, தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்றும் உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீச்சி அடிக்க தடைவிதித்தும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருவிழாவின் கடைசி நாளான ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் விரதமிருந்து, தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பக்தர்கள் ஐதீகத்தை மீறி வருகின்றனர். அதாவது, தோல் பைகளில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி, தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வேதிப்பொருள்கள் மற்றும் திரவியம் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில், தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த விழாவில், பாரம்பரியமாக பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து, தண்ணீர் பீச்சி அடிப்பது நடந்து வருகிறது. ஆனால், இதை சில இளைஞர்கள் வேண்டுமென்றே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அடித்து, அவர்களை துன்புறுத்து வருகின்றனர்.

இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாகும். எனவே, இந்த விவகாரம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆகையால், பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பவர்கள் மட்டுமே, இனி அனுமதிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மேலும், கள்ளழகர் மலையில் இருந்து இறங்கி வரும் வழிகளில், எங்குமே தண்ணீர் பீச்சி அடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை, காவல் துறையினர் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இந்த விதிகளை முறையாக பின்பற்ற, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கானது மட்டுமல்ல. இனி எதிர்காலங்களிலும் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: கள்ளழகருக்கு சாதிவாரி மண்டகப்படியா? - எதிர்ப்பு தெரிவித்த வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் - Madurai Chithirai Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.