ETV Bharat / state

கச்சத்தீவு திருவிழா: பைபர் படகை அனுமதிக்கக் கோரிய மனு - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 8:10 PM IST

கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவு திருவிழா

katchatheevu antony church festival: மீனவர்கள் மற்றும் மீனவக்குடும்பங்களை கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல 12 வாரங்களில் ஆட்சியர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு வழிபாடு நடத்த இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி அளித்த மனுவை விசாரித்த மதுரை கிளை, அடுத்த ஆண்டிற்கு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1913ஆம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டு மீனவர்கள் அங்கு வழிபாடு நடத்துவார்கள். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தற்போது வருகின்ற பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் மேற்படி கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுபடகில் மீனவர்கள், பொதுமக்கள் சென்று வந்தனர். ஆனால் 2013ஆம் ஆண்டில் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு செல்வதற்கு பாதுகாப்பு இல்லையென்று தடை செய்யப்பட்டது.

அதன்பிறகு விசைப்படகிற்கு ஒரு நபருக்கு ரூ.1300 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றதில் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகினை அனுமதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்களுக்கும், மீனவ குடும்பங்களுக்கு மட்டும் கச்சத்தீவு, அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.

இருப்பினும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏதுவாக நவீன முறையில் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் இருந்து இயந்திரம் பொருத்திய பைபர் படகு முறைக்கு அனைத்து மீனவர்களும் மாறிவிட்டனர். கச்சத்தீவு திருவிழாவிற்கு விசைப்படகில் செல்ல ஒரு நபருக்கு 2ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.

இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுக்கு உள்ள சமமானது தான் இயந்திரம் பொருத்திய பைபர் படகு. மேலும் இயந்திரம் பொருத்திய ஒரு பைபர் படகில் செல்வதற்கு எரிபொருள் செலவும் குறைவாகும். ஒரு பைபர் படகில் சுமார் 10 நபர்கள் செல்லலாம். எனவே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு வழிபாடு நடத்த இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதிக்க உத்தரவிடக் கோரி" அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கச்சத்தீவு திருவிழாவிற்கு எந்த வகை படகுகள் அனுமதிக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பினர். அப்போது, மனுதாரர் தரப்பில், தற்போது காலத்திற்கு ஏற்ப குதிரைத்திறன் அதிகமுள்ள இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளை மீனவர்கள் அதிகம் பயன்படுத்துவதால், பைபர் படகுகள் மூலம் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி, இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், கச்சத்தீவு திருவிழாவிற்கான நடைமுறைகள் இந்தாண்டு நிறைவடைந்து விட்டது.

இருப்பினும் அடுத்த ஆண்டிற்குள் மீனவர்கள் மற்றும் மீனவக் குடும்பங்களை கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல 12 வாரங்களில் ஆட்சியர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் எதிரொலி.. இந்தியர்களின் கச்சத்தீவு திருவிழா பயணம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.