ETV Bharat / state

கதிர் ஆனந்த் வழக்கு; இறுதி உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை! - KATHIR ANAND CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 7:12 PM IST

Madras High Court: வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதிர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றம்
கதிர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்தலில், அத்தொகுதியின் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் தொடர்புடைய பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், விமலா-தாமோதரன் என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தொகை கதிர் ஆனந்துக்குச் சொந்தமானது எனக்கூறி, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் மே 31 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, பினாமி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கில் கதிர் ஆனந்தை இணைத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் மே 31 அன்று மனுதாரர் அல்லது அவரது தரப்பு வழக்கறிஞர் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த மோதல்; கட்டிப்பிடித்து சமாதானமான காவலர் - நடத்துநர்.. வைரலாகும் வீடியோ! - Police Vs TNSTC Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.