பாஸ்போர்ட் பெற பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரிய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - Gender reassignment surgery

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 8:11 PM IST

mhc-notice-to-central-govt-about-annex-gender-reassignment-surgery-certificate-for-apply-passport
பாஸ்போர்ட் பெற பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரிய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. ()

Gender reassignment surgery: பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்ற பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து, மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “அறுவை சிகிச்சை மூலம் மூன்றாம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெற மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற விதி, அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்கக் கோரும் பிரிவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, “இயற்கையிலேயே மூன்றாம் பாலினத்தவராக இருந்தால், அவருக்கு இந்த விதி பொருந்தாது. அதேநேரத்தில், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாறும் மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழ் கட்டாயம்” என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு.. மறுவாக்குப்பதிவு உண்டா? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.