ETV Bharat / state

"மறு விசாரணை நடத்தச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதில் தவறு இல்லை" - சொத்துக்குவிப்பு வழக்கில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்! - Ex CM O PANNEERSELVAM Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 8:14 PM IST

o panneerselvam asset case
o panneerselvam asset case

Ex CM O.Panneerselvam asset case: சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்திற்காக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்து 2012ல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில், இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை என்றும், மேல் விசாரணைக்குப் பின் வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ததிலும் எந்த தவறும் இல்லை என்று வாதிட்டார்.

மேல் விசாரணையில் புதிய சாட்சிகள் ஆவணங்களை விசாரித்துத் தான் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது எனவும், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே வழக்கை முடித்து வைக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறை வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்யும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கச் சிறப்பு நீதிமன்றம் காரணம் ஏதும் கூறத் தேவையில்லை எனவும், தாமாக முன் வந்து மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும் 11 ஆண்டுகளுக்குப் பின் எடுக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டியே சிவகங்கை நீதிமன்றம், வழக்கை முடித்து வைக்கக் கூறி லஞ்ச ஒழிபு துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது என கூறி வாதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்திற்காக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் காலில் விழுந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய கரூர் பாஜக வேட்பாளர்! - Karur BJP Candidate Senthilnathan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.