ETV Bharat / state

தேர்தல் 2024; தென்காசியில் வெற்றியை தக்க வைக்குமா திமுக? -Tenkasi Election Results - lok sabha election result 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 7:34 PM IST

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

தென்காசி தொகுதி வேட்பாளர்கள்
தென்காசி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamilnadu)

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சம் மாவட்டமான தென்காசியில்தான், 'ஏழைகளின் நயாகரா' என்றழைக்கப்படும் குற்றால அருவிகள் அமைந்துள்ளன. குற்றாலம் மட்டுமின்றி, காசி விஸ்வநாதர் கோவில், சங்கரநாராயணன் கோவில் என கோவில்களுக்கும் பேர்போன பகுதியாக தென்காசி மாவட்டம் திகழ்கிறது.

தமிழகத்தின் 37வது நாடாளுமன்ற தொகுதியான தென்காசி தனித் தொகுதியில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7,42,158; பெண் வாக்காளர்கள்: 7,73,822; மூன்றாம் பாலினத்தவர் 203. ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தேர்த்து ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 31,664 பேர் கூடுதலாக உள்ளனர்.

திமுகவுக்கு 'கை'மாறிய தொகுதி: காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு, நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுவரை அக்கட்சி இங்கு ஒன்பது முறை வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியே இங்கு தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த தேர்தல் நடைமுறைக்கு மாறாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணியில் பிரதான கட்சியான திமுக இங்கு போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் தனுஷ் எம்.குமார் 4,76,156 (45%) வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர். கிருஷ்ணசாமி 3,55,870 (33%) வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனுக்கு 59,445 (6%) ஓட்டுகள் விழுந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியின் மொத்த வாக்குகளில் 10.66,008 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு சதவீதம் 70.7.

2024 தேர்தலில் களம் எப்படி உள்ளது?: தற்போது நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் மொத்தமுள்ள 15, 25,439 வாக்குகளில் 10,58,987 வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 67. 57.

இந்தியா கூட்டணியில் இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும், அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்களின் நவீன பிரச்சார உத்தி: திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தினமும் வாக்கு சேகரிக்க போகும் இடமெங்கும் பொதுமக்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டும், பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் கைக்குழந்தைகளை கண்டால், அவற்றை வாஞ்சையாக தூக்கி முத்தம் கொடுத்தும் என வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதிமுக கூட்டணி வேட்பாளரான டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு கிராம பகுதியிலும் வாக்கு சேகரிக்க சென்றபோதும், திமுக கட்சியின் குறைகளைச் சுட்டக்காட்டியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிடும் தம்மை, இந்த முறை வெற்றிப் பெற செய்தால், தென்காசி தொகுதிக்கு பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தும் பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டார்.

பாரதிய ஜனதா கட்சி கூட்டமி வேட்பாளராக களம் காணும் ஜான் பாண்டியன், கியூ ஆர் கோடு எனும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர்களின் கைபேசிக்கே தங்களின் தேர்தல் வாக்குறுதிகள்சென்றடையும் விதமாக ஏற்பாடு செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். அத்துடன், அவற்றை நோட்டீஸாக வெளியிட்டும் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களம் கண்ட மதிவாணன். பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய முகத்தைக் கூட சரியாக பதிவு செய்யவில்லை. வாக்காளர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி காட்டிக்கொள்ளாமல் தன்னடக்கமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குற்றாலம் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுப்படும் என்பதும், செண்பகவல்லி அணைக்கட்டு திட்டமும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரதான வாக்குறுதிகளாக இருந்தன.

தென்காசியை பொறுத்தவரை, திமுக- அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது. இந்த நீயா, நானா போட்டியில் வெற்றி வாகை சூடப் போவது யார் என்பதும் ஜுன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 குறித்து மேலதிக தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.