ETV Bharat / state

தஞ்சாவூரில் அறிவகமாக மாறிய காவல் நிலையம்! இன்ஸ்பெக்டரின் புது முயற்சிக்குக் குவியும் பாராட்டு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 3:38 PM IST

POLICE STATION LIBRARY: தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டரின் சீரிய முயற்சியால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையத்தில் அறிவகம் என்ற பெயரில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

Library opened at Thanjavur Police Station
தஞ்சாவூர் காவல் நிலையத்தில் நூலகம் தொடக்கம்

தஞ்சாவூரில் அறிவகமாக மாறிய காவல் நிலையம்! இன்ஸ்பெக்டரின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டு..

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (50). இவர் திருவாரூர், கபிஸ்தலம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் 23 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் முதன்முறையாக தான் பணிபுரியும் காவல் நிலையத்தை அறிவகம் என்ற நூலகமாக மாற்றி உயர் அலுவலர்கள், சக போலீசார் மற்றும் பொதுமக்களிடத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். காவல் நிலைய வளாகத்தில் மேற்கூரை அமைத்து, அங்கு உட்கார இருக்கைகள் போட்டு, பாதுகாப்பாக பீரோவில் நூல்களை அடுக்கி வைத்து, நூலகத்தை தொடங்கியுள்ளார்.

அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல், ஆன்மீகம், கதை, கவிதை, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் விவேகானந்தர், டாக்டர் அப்துல்கலாம், அன்னை தெரசா ஆகியோரின் பொன்மொழிகளை அச்சிட்டு, காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை அறிவகமாக உருவாக்கி உள்ளார்.

இந்த அறிவகத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை எஸ்.பி ஆஷிஷ் ராவத் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு அழியாத செல்வம் கல்வி ஒன்றே என அச்சிடப்பட்ட பேனாவைவும், 'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என அச்சிடப்பட்ட பைலையும், தனது சொந்த செலவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழங்கி வருகிறார்.

மேலும் அறிவகத்தில் கல்வி தொடர்பான வாசகங்கள், தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு தெருக்களின் பெயர்கள், கவுன்சிலர்களின் பெயர்கள், அவர்களின் தொடர்பு எண், காவல்துறை அவசர உதவி எண்கள் என அனைத்தையும் பெயர் பலகையில் எழுதி உதவி செய்து வருகிறார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறுகையில், "நூலகத்தின் நோக்கம் மனம் மாற்றம் ஏற்பட வேண்டும், கல்வி மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும், நூலகத்திற்கு நிறைய புத்தகங்கள் வரவேண்டும், அவற்றை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பொதுவாக காவல் நிலையம் என்றாலே பலருக்கும் சிறிதளவு பதற்றம் ஏற்படும். ஆனால் இங்குள்ள காவல் நிலையமோ அறிவை வளர்க்கிறது. எனவே, இத்தகைய புது முயற்சியினை துவக்கி வைத்திருக்கும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் செயல், பொது மக்கள் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சேலத்தில் நீர் ஏற்ற திட்டப் பணிகளில் சுணக்கம்.. எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு துரைமுருகன் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.