ETV Bharat / state

லெமன் சிட்டியில் 1 கிலோ லெமன் ரூ.150க்கு விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி! - Lemon Price Increase

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 7:00 PM IST

Lemon Price Increase: சுட்டெரிக்கும் கோடை வெயிலில் எலுமிச்சை நகரம் என்று அழைக்கப்படும் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.150-க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புளியங்குடி சந்தையில் எலுமிச்சை புகைப்படம்
புளியங்குடி சந்தையில் எலுமிச்சை புகைப்படம் (credits - etv bharat tamilnadu)

புளியங்குடி வியாபாரி கிருஷ்ணகுமார் அளித்த பேட்டி (Credits - ETV Bharat TamilNadu)

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி எலுமிச்சை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதில், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியிலேயே எலுமிச்சை சந்தையும் உள்ளது. எலுமிச்சை விற்பனைக்காக மட்டுமே ஒரு சந்தை செயல்பட்டு வருவது புளியங்குடியில் மட்டுமே.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் வெப்பத்தில் தவிக்கும் மக்கள் தாகத்தை தணிப்பதற்காக இளநீர், மோர், கரும்பு ஜூஸ், சர்பத், எலுமிச்சை பழரசம் உள்ளிட்டவற்றை அருந்துகின்றனா்.

விளைச்சல் குறைவு: புளியங்குடி எலுமிச்சை சந்தைக்கு எலுமிச்சை வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழங்கள் அதிகளவில் சேதம் அடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், போதிய விளைச்சல் இல்லாமல் குறைவாகவே எலுமிச்சை பழங்கள் புளியங்குடி சந்தைக்கு வருகின்றன.

விலை உயர்வு: கோடை வெயிலின் காரணத்தினால், எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

புளியங்குடி மார்க்கெட்டிலிருந்து எலுமிச்சைப்பழம் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, கேரளாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழத்தின் விலை உயர்வால், சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் என அனைவரும் போட்டிபோட்டு பழத்தை வாங்கிச் செல்கின்றனர். வெயிலின் தாக்கம் இருப்பதால் எலுமிச்சை பழத்தை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். எலுமிச்சை அதிகமாக விற்பனையாவதால் வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து புளியங்குடி வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியாதாவது, “வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் விலை உயர்வு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை ரூ.100-ல் இருந்து 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புளியங்குடியில் அதிகளவில் எலுமிச்சை உற்பத்தி செய்யப்படுவதால், இப்பகுதியில் குளிர்சாதனக் கிடங்கு இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு போட்டியாக உ.பி. அமைச்சரை களமிறக்கும் பாஜக! யார் இந்த தினேஷ் பிரதாப் சிங்? - Rae Bareli BJP Candidate

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.