ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:11 PM IST

leaders-and-celebrities-have-extended-their-wishes-on-the-occasion-of-tn-cm-mk-stalin-birthday
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள்; கூட்டணிக் கட்சித் தலைவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பு..

TN CM MK Stalin Birthday Wishes: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் திரையுலகப் பிரபலங்கள் எனப் பல தரப்பினர் நேரில் சந்தித்தும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், திருவாவடுதுறை ஆதீனம் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களைச் சந்திப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தி.மு.க தலைவர்களும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

மதிமுக சார்பாக வைகோ, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எனப் பலரும் முதலமைச்சரைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும் போது, "இந்த நாள் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் நாள் எனவும், பாசிச அராஜகப் போக்கை எதிர்த்து நேரடியாகப் போராடக்கூடிய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமல்லாமல் தான் கொண்ட கொள்கையின் அடிப்படையிலும் என்றும் மாறாமல் நிற்பவர் மு.க.ஸ்டாலின் எனப் புகழாரம் சூட்டினார்.

மதிமுகச் சார்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம் எனவும், பதிவு செய்யப்பட்டச் சின்னம் மற்றும் கட்சி என்பதால் அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்.

நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் வரவுள்ளதாலும், தொகுதிப் பங்கீடு இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். மதிமுக சார்பாக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்த பிறகு மதிமுகவின் வேட்பாளர்கள் யார் என முறையாக அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக நாங்கள் ஒரு தொகுதி கேட்டுள்ளோம் கொடுத்தால் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட வேல்முருகன் இது குறித்துப் பேசுவதற்கு நாளை அழைப்பதாக தி.மு.க தலைவர் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இடம் கொடுத்து தொகுதிகளை ஒதுக்கினால் மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, "தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவுகள் பற்றி அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.