ETV Bharat / state

நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 3:57 PM IST

நீலகிரியில் போட்டியிடுவது குறித்து எல்.முருகன் விளக்கம்
நீலகிரியில் போட்டியிடுவது குறித்து எல்.முருகன் விளக்கம்

BJP L.Murugan contest in Nilgiri constituency: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் தொகுதியில் போட்டிளா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியா?

கோயம்புத்தூர்: பிரதமர் மோடி கோவையில் இன்று (மார்ச்.18) மாலை சாலை பேரணியில் பங்கேற்பதை முன்னிட்டு, விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவு உடன் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலத்தில், தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இது தமிழக பாஜகவினருக்கும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை புரிந்துள்ளார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணமாக இருந்துள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேசத்திற்கு எதிரானவர் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும். கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணியின் (INDIA alliance) நோக்கம். 2ஜி ஊழலில் ஈடுபட்டவர் ஆ.ராசா, அதனால் பயன்பட்டது திமுக குடும்பம்.

பாஜக யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை. தாங்களாக முன்வந்து தேர்தல் பத்திர நிதியை தந்துள்ளார்கள். திமுக, காங்கிரஸ் அப்படி தான் தேர்தல் பத்திர நிதி வாங்கினார்களா. மாநிலத்தில் அதிக நிதி தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியது திமுக தான். ஊழலை பற்றி திமுகவினர் பேச முடியாது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக, ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அமைச்சர்கள் மீதோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ எந்த ஒரு சிறிய புகாரும் இல்லாத அளவிற்கு ஒரு ஊழல் அற்ற நிர்வாகத்தை பாஜக அரசு மக்களுக்கு தந்து வருகிறது" எனப் பேசினார்.

மேலும் பேசிய அவர், "தேர்தல் பத்திர நிதி குறித்த விவரங்களைக் கட்சித் தலைமை வெளியிடும். பொன்முடியை உச்சநீதிமன்றம் குற்றமற்றவர் என நீதிமன்றம் சொல்லவில்லை. அதனால் தான் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை" எனத் தெரிவித்தார். அதன் பின்னர், நீலகிரியில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்

அதற்கு, "நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் இந்த சாதாரண தொண்டனின் கடமை. அதன் அடிப்படையில் தான் அந்த பகுதிகளில் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கட்சி சொன்னால் அந்த பகுதியில் போட்டியிடுவேன். வரும் தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திரம்: ரூ.650 கோடி நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.