ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான நுங்கு பதநீர்.. கிருஷ்ணகிரி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - iceapple sales

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 3:46 PM IST

Updated : Apr 26, 2024, 3:52 PM IST

Krishnagiri palm fruit
Krishnagiri palm fruit

Krishnagiri palm fruit: கிருஷ்ணகிரியில் கொளுத்தும் வெயில் காரணமாக நுங்கு விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பனை மரங்களைக் காக்க அரசு தனி செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishnagiri palm fruit

கிருஷ்ணகிரி: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வரத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களை இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்க தர்பூசணி, நுங்கு, இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.

அந்த வகையில், கிருஷ்ணகிரியில் கொளுத்தும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் அனைத்து விதங்களிலும் பயன்தரக் கூடியவையாக இருக்கிறது. பனை இலையை விசிறி தயாரிக்கவும் நுங்கு, பனை பழம், பனைக்கிழங்கு, பதநீர், கள்ளு, கருப்பட்டி என எல்லா பருவங்களிலும் வருமானம் ஈட்டுபவையாக பனை மரம் விளங்குகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், உஷ்ணத்தை தணிக்க கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. நீர் ஆகாரமான நுங்கு, இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்துச் செல்கின்றனர். ஒரு நுங்கு 10 ரூபாய்க்கும், 8 நுங்கு 50 ரூபாய் எனவும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும், பனை மரங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாலே நுங்கு விலை அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு இந்த மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பனை மரத்தில் இருக்கும் நுங்கு, பதநீர் ஆகியவற்றை அருந்தி சூட்டைத் தணித்து வருகின்றனர். இன்னும் வரும் நாட்களில், வெயில் அதிகமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு பனை விதைகளை நடுவதற்கு அரசு ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்.

அதேபோல், பனை மரம் வறட்சியைத் தாங்கி, நிலத்தடி நீரை பாதுகாக்கக்கூடிய மரங்கள் என்பதால், நீரை சேமிக்கவும், வருமானத்தை அளிக்கும் பனை மரங்களை காத்திட தமிழ்நாடு அரசு புதிய செயல்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என பொதுமக்களில் ஒருவரான செந்தமிழ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ! - Perambalur Father Attack Video

Last Updated :Apr 26, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.