ETV Bharat / state

சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 9:21 PM IST

சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி
சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

Chennai inter school sports competition: சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை: சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (பிப்.01) தொடங்கி வைத்தார்.

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 64 ஆயிரத்து 864 மாணவ, மாணவியர் 10 மண்டலங்களாகப் பிரித்தும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44 ஆயிரத்து 382 மாணவ, மாணவியருக்கு 4 கல்வி மாவட்டங்களாகப் பிரித்தும் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டதில், ரூபாய் 19 லட்சத்து 35 ஆயிரத்து 600 மதிப்பில் 5,340 பரிசுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) பயின்ற குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 400 குழந்தைகளுக்கு, ரூபாய் 90 ஆயிரம் மதிப்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் சென்னை பள்ளிகளின் மண்டல அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 940 மாணவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் வெற்று பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்திறன் கோப்பைகளும், ஏற்கனவே மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர், கல்விக்காகவும், விளையாட்டு மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவித்தார்.

தற்போது சென்னை பள்ளிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சென்னை மாநகராட்சிப் பள்ளி என்பது, சென்னை பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 338 சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 81 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என தற்போது மொத்தம் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

சென்னை பள்ளிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்று, உலகம் முழுவதும் சென்று மிகப்பெரிய பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அவ்வாறு சென்று திரும்பி வரும்போது, இந்தப் பள்ளியில் படித்தோம் என்ற பெருமை சென்னை பள்ளிக்கு உங்களால் கிடைக்கும். மாணவர்களாகிய நீங்கள் விளையாட்டு மட்டுமில்லாமல், நன்றாக கல்வி பயின்று, எத்தகைய பதவிகளில் இருந்தாலும், எங்கு சென்றாலும், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை மறவாமல் நன்றி செலுத்துபவர்களாகவும், பள்ளிக்கு பெருமை சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.