ETV Bharat / state

கோவை மக்களின் குடிநீர் பிரச்னைக்கான தீர்வு என்ன? - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 2:10 PM IST

TN Assembly 2024
அமைச்சர் கே.என் நேரு

TN Assembly 2024: கீழ்பெண்ணாத்தூர் மற்றும் 130 கிராமங்களுக்குக் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் பிவிசி குழாய்கள் உடைக்கப்படுவதைத் தடுப்பது, ஏரிகளில் நீர்வளத்துறையில் உரிய அனுமதி பெற்று கிணறு வெட்டுவதற்கான நடவடிக்கை, பில்லூர் 3வது குடிநீர் திட்டம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

சென்னை: இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) முன்பாக மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வினாக்கள் விடைகள் நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை சம்பந்தமான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அத்துறை அமைச்சர் கே.என் நேரு பதிலளித்தார்.

கேள்வி: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் 130 கிராமங்களுக்குக் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் பிவிசி குழாய்களை வழியில் இருப்பவர்கள், உடைத்து தங்களது இடத்தில் பாய்ச்சிக் கொள்வதால், குடிநீர் கொண்டுவரமுடியாத நிலை இருக்கிறது. ஆகவே, அந்த குழாய்களை எல்லாம் டிஐ (DI Pipe) குழாய்களாக மாற்றினால் தான் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்குமெனவும், இதனை அரசு செய்யுமா? எனவும் கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

பதில்: ஏற்கனவே இதற்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், ஆய்வு செய்து நிதிநிலைமைக்கேற்ப, எவ்வளவு விரைவாக செயல்படுத்த முடியுமோ, அதை விரைவாக செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு பதிலளித்தார்.

கேள்வி: வேட்டவலம் பேரூராட்சியில் குடிநீர்த் திட்டத்திற்காக ஏரிகளில் கிணறு வெட்டுவதற்கு அனுமதியளிக்கப்படாமல் இருப்பதால், கிணறு வெட்டப்படாமல் இருக்கிறது. ஆகவே அதற்கும் வழிவகை செய்ய அரசு அரசு ஆவணம் செய்யுமா? என எம்எல்ஏ கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

பதில்: ஏரிகளில் ஆழ்துளைக் கிணறு வெட்டி, நீர் தரலாம் என்ற திட்டத்திற்கு, நீர்வளத்துறையின் தலைமை அனுமதித்தால் தான், அதை செய்ய முடியும் என நீர்வளத்துறையின் பொறியாளர் தெரிவித்தார். தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். நீர்வளத்துறை அமைச்சரிடமும் கூறி, நீர்வளத்துறையில் உரிய அனுமதி பெற்று கிணறு வெட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எம்எல்ஏ கு.பிச்சாண்டி இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்றால், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

கேள்வி: மேட்டூர் தொகுதி கோனூர் ஊராட்சியில் 22 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பள்ளிப்பட்டி கிராமத்திற்கும், கோனூர் ஊராட்சிக்கும் தனி கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நீர்வளத்துறை நிறைவேற்றி கொடுக்குமா? என சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் கேள்வியெழுப்பினார்.

பதில்: திமுக ஆட்சி தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டில், ரூ.7 ஆயிரத்து 148 கோடி மதிப்பீட்டில், 58 புதிய திட்டங்களைக் குடிநீர் வடிகால் வாரியம் நிறைவேற்றி உள்ளது. 663.36 மில்லியன் லிட்டர் தண்ணீர் 103 லட்சம் மக்களுக்காக வழங்கப்படுகிறது. 75.45 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.15,155.89 கோடிக்குப் புதிய திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1658.35 கோடியில் மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

4 கோடி 35 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூட்டுக் குடிநீர்த்திட்டம் தற்போது மேலும், 3 கோடி மக்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோனூர் ஊராட்சிக்கும் தனி கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்தும் கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

கேள்வி: கொள்ளிடம் ஆற்றில் 35 இடங்களில் ஆழ்துளைக் கிணறு வெட்டி, நிலத்தடி நீரை எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. ஆகவே, கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்து தடுப்பணைகள் அமைத்தால்தான், நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளும் நலம் பெறுவர். ஆகவே, கூட்டுக் குடிநீர்த்திட்டம் நீர் செறிவு பெறுவதற்குத் தடுப்பணைகள் அமைக்கப்படுமா? அதற்கான திட்டம் உள்ளதா? திருவையாறு தொகுதியில் 2 இடங்களில் தடுப்பணை அமைப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது? என திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.

பதில்: கூட்டுக் குடிநீர்த்திட்டத்திற்காகக் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் 244 இடங்களில் ஆழ்துளைக் கிணறு வெட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகத் தடுப்பணைகள் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலைக்கேற்ப இத்திட்டத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார்.

கேள்வி: கோயம்புத்தூர் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறுவாணி அணையிலிருந்து அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த 73 எம்.எல்.டி தண்ணீர், தற்போது திமுக ஆட்சியில் 38 எம்.எல்.டி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு 21 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

பதில்: சிறுவாணி அணையிலிருந்து 87 எம்.எல்.டி தண்ணீர் தர வேண்டிய நிலையில் 38 எம்.எல்.டி தான் தருகிறார்கள். சிறுவாணி தண்ணீர் குறித்து கேரள அரசிடம் கேட்டதற்கு, மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் தர இயலவில்லை என காரணம் சொல்கின்றனர். மேலும், கோயம்புத்தூர் மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பில்லூர் 3வது திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கிடைக்கும் என அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார்.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் புதிய புனல்மின் நிலையம் கொண்டுவர வாய்ப்புள்ளதா? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.