ETV Bharat / state

"மகளிர் உரிமை தொகையால் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை" - உயிருக்குப் போராடும் முதியவர் வேதனை! - Ration Card issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 12:35 PM IST

Ration Card issue
ரேஷன் கார்டு வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

Ration Card issue: அந்தமானில் இருந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து பல வருடங்கள் ஆனப் பின்பும், மருத்துவ சிகிச்சைக்காக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும், உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கரூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக ரேஷன் கார்டு வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் வசித்து வருபவர், பெரியசாமி (70). சிறுநீரகங்கள் செயலிழந்ததன் காரணமாக, இவர் டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்து வருகிறார். வாரத்தில் இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வாரம் ஒன்றுக்கு ரூ.12,000 மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

1969ஆம் ஆண்டு குடும்பத்துடன் அந்தமான் தீவுக்கு சென்ற பெரியசாமி தற்பொழுது தமிழகம் திரும்பி, அவரது சொந்த ஊரான, கரூர் அருகே உள்ள செய்யப்பகவுண்டன்புதூரில் வசித்து வருகிறார். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர் தமிழகத்தில் காப்பீட்டு அட்டை பெற ரேஷன் கார்டு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ரேஷன் கார்டு வழங்குவதற்கு வட்ட வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால், தினந்தோறும் உயிருக்குப் போராடி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்ட ஆட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு ஏராளமான மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித பயனும் இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தனக்கு, ஓட்டுரிமை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் இருந்தும் ரேஷன் அட்டை இல்லாததால், அரசின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இது குறித்து பெரியசாமி கூறுகையில், "கரூர் அருகே உள்ள செய்யப்பகவுண்டன்புதூரில் இருந்து 1969ஆம் ஆண்டு அந்தமான் சென்றோம். அங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாக, என்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது.

இதன் காரணமாக, நான் மற்றும் எனது மனைவி ஆகிய இருவரும் சொந்த ஊரான கரூருக்கு வந்துவிட்டோம். இங்கு வந்த பிறகு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாற்றிவிட்டேன். ஆனால், ரேஷர் அட்டை மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்ட போது, 'மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தி வைத்துள்ளார்கள்" என்கிறார்கள். டயாலிசிஸ் செய்ய வாரம் ஒன்றுக்கு ரூ.12,000 என இதுவரை 3 லட்சத்திற்கு மேல் செலவு செய்துவிட்டேன். தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட, ரேஷன் அட்டை கேட்கிறார்கள். எனக்கு உரிமைத்தொகை எல்லாம் ஒன்றும் வேண்டாம், ரேஷன் அட்டை வழங்கினால் மட்டும் போதும்" என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: விவாதத்துக்குள்ளாகிய செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா? கெட்டதா? உணவியல் ஆலோசகர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.