ETV Bharat / state

“இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை” - கனிமொழி குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 7:32 PM IST

DMK MP Kanimozhi
திமுக எம்பி கனிமொழி

DMK MP Kanimozhi: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு இதுவரை நிதி தரவில்லை என கனிமொழி குற்றச்சாட்டு

மதுரை: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் கூட்டம், இன்று (பிப்.7) மதுரை பாண்டி கோவில் ரிங்ரோடு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் நேரடியாகச் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கனிமொழி, "மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் எங்களிடம் கோரிக்கைகளை அளித்திருக்கின்றனர். கோரிக்கைகளை படித்து, முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்று, அவரின் ஒப்புதலைப் பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.

ஜிஎஸ்டியில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள், வரிகள், குறிப்பாக சிறு குறு தொழில் செய்யக் கூடியவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனர். ரயில்வேயை பொறுத்தவரை, தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக நிதி குறைவாகத்தான் ஒதுக்கப்படுகிறது. 100 நாள் வேலையில் பல குழப்பங்கள் உள்ளன. சரியாக சம்பளம் வராத சூழ்நிலை உள்ளது.

மக்கள், விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை கோரிக்கையாக வைத்திருக்கின்றனர். எப்பொழுதுமே கூட்டணிக் கட்சிகளை மதித்து, அந்த பிரதிநிதிகளுக்கு எங்களை விட அதிக முக்கியத்துவம் தந்து, அவர்களை அரவணைத்து நடத்தக் கூடியதே இந்த கூட்டணி. சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்.

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அதற்கு முன்னால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை பாஜகவினர் நிறைவேற்றவில்லை. 15 லட்சம் தருகிறோம் என்றனர், இரண்டு தேர்தல் முடிந்துவிட்டது. யாருக்கும் வந்து சேரவில்லை. விவசாயிகளுக்குத் தருவேன் என்று சொன்ன அந்த தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.

யாருக்கும் சரியாக போய் சேரவில்லை. கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கின்றனர். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாகவாது, இந்த மசோதா நிறைவேற்றப்படுமா என்ற சூழல்தான் தற்போது உள்ளது. இப்படிப்பட்ட ஒன்றிய அரசிடம்தான் நாம் பயணிக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

மழையால் சென்னை, தென் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஆனால், இன்று வரை தரப்பட்டு வரும் நிவாரணங்களை எல்லாம் தமிழக அரசுதான் தந்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, மூன்று முறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் சென்னையையும், தென் மாவட்டங்களையும் பார்வையிட்டுச் சென்றனர். இன்று வரை ஒரு பைசா கூட வரவில்லை.

தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யக்கூடாது என்ற ஒரு மனநிலையில்தான் மத்திய அரசு உள்ளது. மகளிருக்கு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் திட்டத்தை எவ்வளவு நிதிநிலை சிக்கல்கள் இருந்தாலும் கொடுத்து, வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி தந்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற முடியும். கண்டிப்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்; வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.