ETV Bharat / state

சித்திரை திருவிழா: வாராரு வாராரு அழகர்..! பச்சைப் பட்டு உடுத்திய அழகர்.. விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்..! - Madurai Kallazhagar Festival

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 6:57 AM IST

Updated : Apr 23, 2024, 10:43 AM IST

kallazhagar entered the Vaigai River for madurai chithirai festival
மதுரை சித்திரை பெருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்

Madurai Chithirai Festival: சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்தோடு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

பச்சைப் பட்டு உடுத்திய அழகர்.. விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்

மதுரை: உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில், கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு உற்சாகமாக வரவேற்றனர். இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு அருள்மிகு வீரராகவா பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாத்தும் வைபவம் நடைபெற்றது.

வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு 'கோவிந்தா' முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். மேலும் பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பலத்த பாதுகாப்பு: கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநகர காவல்துறையின் சார்பாக தற்போது தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியின் சார்பாக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறை வாகன வசதிகளும் பக்தர்களுக்காக செய்யப்பட்டிருந்தன. மேலும், சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அழகர்கோயிலில் தொடங்கி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் வரை ஏறக்குறைய 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் இருமார்க்கத்திலும் கள்ளழகர் எழுந்தருள்கிறார். வைகையாற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் பக்தர்களால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: "தோல்வியால் துவளவில்லை" கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றி ரகசியம் - Indian Grandmaster Gukesh

Last Updated :Apr 23, 2024, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.