ETV Bharat / state

அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.. கடம்பூர் ராஜூ சாடல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 11:33 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர்
கடம்பூர் ராஜு

Kadampur Raju: 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழ்நாட்டுக்காக என்ன சாதனைகள் செய்துள்ளது என்பதை பட்டியலிட அண்ணாமலை தயாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சியில், மீனாட்சி நகர் 4வது தெருவில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசு, தமிழகத்திற்காக என்னென்ன சாதனைகள் செய்தார்கள் என்பதை பட்டியலிட அண்ணாமலை தயாரா? தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இதுவரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால், பல மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு, கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

தமிழர் நலன் சார்ந்த பிரச்சினை ஒன்று கூட தீர்க்கப்படவில்லை. கச்சத்தீவு, காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை அதற்கு தீர்வு காணவில்லை. நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி நிலம் எடுப்பு விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.

எனவே, விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கும் அண்ணாமலை, இது போன்ற பிரச்சினைகள் குறித்து பேசினால் நன்றாக இருக்கும். அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில், கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிராகவே உள்ளன. தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற முடிவை ஈபிஎஸ் தற்போது எடுத்துள்ளார்.

தன்னிச்சையாக போட்டியிட்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்று, யார் பிரதமராக வருவார் என்பதை அதிமுக நிர்ணயம் செய்யும். பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சிப்பதை ஓபிஎஸ் கேட்கவில்லை. அவற்றை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்கிறாரா? அதிமுக கூட்டணிக்கு அதிகளவில் கட்சிகள் வர உள்ளன.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால், தற்போது வரை உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத்து கூட்டணி கட்சி தரப்புகளையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. எதிர்பார்க்காத மெகா கூட்டணி அதிமுக தலைமையில் விரைவில் உருவாகும். 39 தொகுதிகளும் வெற்றியைப் பெறுகிற கூட்டணியாக அதிமுக இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்ச்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை.. அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.