ETV Bharat / state

சென்னை அண்ணா பல்கலை. மாணவர்கள் இங்கிலாந்து செல்வதற்கான விசா பயிற்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 11:44 AM IST

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

Anna University: பொறியியல் மாணவர்கள் இங்கிலாந்து செல்ல விசா விண்ணப்பம் பெறுவதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று(பிப்.20) நடைபெற்றது.

சென்னை: பொறியியல் மாணவர்கள் 3,000 பேர் இங்கிலாந்து செல்வதற்கான விசா பெறுவதற்காக உரிய புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 18 - 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இங்கிலாந்து நாடுகளில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக செல்வதற்கு ஏதுவாக India - UK Young Professionals திட்டத்தின் மூலம் 3000 விசா வழங்குவது சென்ற ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மற்றும் டெல்லி பிரிட்டிஸ் தூதரகம் (British High Commission, New Delhi) இணைந்து Young Professionals Scheme திட்டத்தின் மூலம் 3000 இளைஞர்களுக்கு விசா விண்ணப்பம் பெறுவதற்கான அறிமுக நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் கூட்டரங்கில் நேற்று(பிப்.20) நடைபெற்றது.

இதில், உயர்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் பிரிட்டிஷ் தூதரக ஆணையர் அலெக்ஸ் எலிஸ் (The British High Commissioner Alex Ellis) ஆகியோர் கலந்து கொண்டு, இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்கள் இரண்டு வருட காலத்திற்கு இங்கிலாந்து நாடுகளுக்கு சென்று கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறவும், பிரிட்டிஷ் இளைஞர்கள் நமது இந்தியாவில் தங்கி வேலைவாய்ப்பு பெறவும் வழி வகை செய்கிறது.

இதன் மூலம் இருநாட்டு இளைஞர்களும் தங்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும், தொழில்த்துறைச் சார்ந்த அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் துணை செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறையின் குடி பெயர்ப்பு நலத்துறை இயக்குனர் நிதீஷ் குமார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜா கண்ணப்பன், "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை மேம்படுத்தி, புதுமையான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 லட்சம் மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்களுக்கும் புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து ரூ.370 கோடி நிதி வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபோலவே அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்க அறிவித்துள்ளார். உயர்கல்வியில் தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல்: தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.