ETV Bharat / state

"அறந்தாங்கி தொகுதியை ஒதுக்காவிட்டால் தற்கொலை" - பகீர் கிளப்பிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ! - India Alliance Party Meeting

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 1:13 PM IST

INDIA Alliance Party Meeting
இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்ட

INDIA Alliance Party Meeting: புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஒதுக்காவிடில், தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்ட

புதுக்கோட்டை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியும் வருகிறது. இந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ் கனி வெற்றிபெற்று, தற்போது எம்.பி-யாக இருந்து வருகிறார். இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி இந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகே ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு தற்போதைய எம்.பி-யாக உள்ள நவாஸ் கனியே மீண்டும் களம் காண்கிறார். இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 21) அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய அறந்தாங்கி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், "இந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாங்கள் கூட்டணி கட்சிக்காக வாக்கு சேகரிப்போம். ஆனால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், அறந்தாங்கி தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட வழிவகை செய்ய வேண்டும்.

இல்லையேல், தற்கொலை முயற்சியில் அனைவரும் அறிவாலயம் நோக்கி செல்வோம்" என்று கூட்டத்தில் பேசினார். இதையடுத்து, கூட்டத்தில் பெரும் சலசலப்பு உருவாகியது. கடந்த சட்டமன்ற தேர்தலில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்பட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம் பேசுகையில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால், இங்கு வரமுடியவில்லை. ஆனால், போஸ்டரில் அவர் படம் இல்லை. இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் படத்தையும் போட வேண்டும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாஜக திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைப்பதாகவும், அது ஒருபோதும் நடக்காது என்றும் பாசிச பாஜக தான் நம் எதிரி என்பதால், அவர்களை வீழ்த்துவோம் எனக் கூறினார்.

பின்னர் தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, "முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம்" என்று கூறினார். மேலும், இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் படம் அச்சடிக்கப்படும் என்று, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்புராமுக்கு பதில் கூறுவது போன்று பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும், 2026 சட்மன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்காவிடில் தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக எழுந்த பேச்சும், கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: “நாளை மலைக்கோட்டை மாநகரில் பரப்புரையைத் தொடங்குகிறேன்” - திருச்சி திமுக பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்! - MK Stalin In Trichy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.