ETV Bharat / state

"தென்னிந்தியாவின் இசைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு" - கிராமிய விருது பெற்ற செல்வகணேஷ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:35 PM IST

Percussionist Selvaganesh: 15 வருடங்கள் கடின உழைப்பால் தற்போது இந்த குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது. எனது தந்தையும் கிராமி விருது பெற்றுள்ளார். தென்னிந்தியாவின் இசைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என கிராமிய விருது பெற்ற தாள கலைஞர் செல்வகணேஷ் தெரிவித்துள்ளார்.

கிராமிய விருது பெற்ற தாள கலைஞர் செல்வகணேஷ்
கிராமிய விருது பெற்ற தாள கலைஞர் செல்வகணேஷ்

கிராமிய விருது பெற்ற தாள கலைஞர் செல்வகணேஷ்

சென்னை: இசைக் கலைஞர்களின் திறமைகளைப் போற்றி இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது தான் கிராமி விருதுகள். கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெறும். அமெரிக்காவை சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (பிப். 14) நடைபெற்றது.

இதில் இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் சமீபத்திய ‘This Moment’ என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி.செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 8 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் கிராமிய விருது பெற்ற தாள கலைஞர் வி.செல்வகணேஷ் அமெரிக்காவிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அவரது உறவினர்கள் மற்றும் இசைக் குழுவினர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தாள கலைஞர் செல்வ கணேஷ் கூறுகையில், "எனது குருவிற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இல்லையென்றால் என்னால் இந்த சாதனை செய்திருக்க முடியாது.

15 வருடங்கள் கடின உழைப்பால் தற்போது இந்த குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது. எனது தந்தையும் கிராமி விருது பெற்றுள்ளார். அதே குடும்பத்தில் மீண்டும் நான் பெற்றுள்ளேன். மிகவும் பெருமையாக உள்ளது. நான் முதன் முதலில் பணியாற்றிய வெண்ணிலா கபடி குழு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை இன்று வரை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ள இளைஞர்கள் கடினமாக வேலை செய்து உழைக்க வேண்டும். அவர்களுக்கான வெற்றி பிறகு வந்து சேரும். காலத்திற்கு ஏற்றார் போல் இசை மாறுபட்டுக் கொண்டே இருக்கும். தென்னிந்தியாவின் இசைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.சுவாமிநாதன் வாழும் போதே பாரத ரத்னா வழங்கியிருக்க வேண்டும் - சௌமியா சுவாமிநாதன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.