புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் இடுகாடு பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வழியாக விவசாய வேலைக்குச் சென்ற விவசாயிகள் பாழடைந்த கிணற்றில் அரசுப் பள்ளி சீருடைகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதற்கு இடையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவர் சிறுமிகள் அந்த உடைகளை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, தகவல் அறிந்த அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வுசெய்து பார்த்த போது, 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வழங்கவேண்டிய சுமார் 2,500க்கும் மேற்பட்ட சீருடைகள் கிடந்தது தெரியவந்தது. இதேபோல், தஞ்சாவூர் - புதுக்கோட்டைச் சாலை ஓரமாகச் சீமை கருவேலமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் மூட்டை மூட்டையாக அரசுப் பள்ளி சீருடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சூழ்நிலையில், கல்வித்துறை சார்பில் இந்த செயலை செய்தது யார் என்று கண்டறியும் பொருட்டு கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தான் அரசுப் பள்ளியில் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடையை கல்வித்துறை அதிகாரிகள் ஏன் வழங்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, அரசு கல்வித்துறை அதிகாரிகள் துணையோடு தான் இந்த சீருடைகளை இரு வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பதாகவும் அதனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரியாணி கொடுத்தால்தான் பணி செய்வீர்களா? - அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பிய தருமபுரி ஆட்சியர்!