ETV Bharat / state

கடந்த ஒரே ஆண்டில் 440 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.. சென்னை விமான நிலையம் வெளியிட்ட அதிர்ச்சி தரவுகள்! - Smuggling Cases in Chennai Airport

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:34 AM IST

CHENNAI AIRPORT: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் வரை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெளிநாட்டு கரன்சி மற்றும் போதைப்பொருள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் அரிய வகை உயிரினங்களின் புகைப்படங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் அரிய வகை உயிரினங்களின் புகைப்படங்கள் (Credit ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுகிறது.

அதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தாய்லாந்து உட்பட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சிகள் அதிகமாக கடத்தப்படுகின்றன.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து வருகின்றனர். இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது.

தங்கம் கடத்தல்: இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரை சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தங்கம், போதைப் பொருள்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள், 878 பயணிகளிடம் இருந்து, 344 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.184.70 கோடியாகும். அதேபோல், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 132 பேரிடம் இருந்து (ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒரே விமானத்தில் 113 பேர்) 96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.64 கோடியாகும். ஒட்டு மொத்தமாக 440 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மதிப்பு ரூ.248 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள்கள்: இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனைகளில், 2023-2024 ஆம் ஆண்டில் கொக்கைன், ஹெராயின், மெத்தோபெட்டமின் உள்ளிட்ட 42.68 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.192 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு கரன்சி: மேலும், சுங்கத்துறை 2023-2024ஆம் ஆண்டு, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு 19.44 கோடி ரூபாய் ஆகும். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் 18 வழக்குகளில், சுமார் 150-க்கும்‌ மேற்பட்ட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த உயிரினங்கள் எந்த நாடுகளிலிருந்து வந்ததோ, அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு, சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் 738 வழக்குகளில் 137.66 கோடி ரூபாய் மதிப்புடைய 291 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ரூ.45 கோடி மதிப்புடைய 21.39 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ரூ.10.47 கோடி மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் 332 வழக்குகளில் ரூ.62.10 கோடி மதிப்புடைய 141.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், 77 வழக்குகளில் ரூ.60 கோடி மதிப்புடைய 33.72 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதே ஆண்டில் ரூ.7.53 கோடி மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த புள்ளி விவரங்களின் படி, கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இதனால் சென்னை சென்னை விமான நிலையம் கடத்தல்காரர்கள் புகலிடமாக மாறிவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த மூன்று ஆண்டு புள்ளி விவரங்களில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மட்டுமே முழுமையான விவரங்களை வெளியிட்டுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், மத்திய போதை தடுப்பு (NCB) பிரிவினர் பறிமுதல் செய்த விவரங்கள் வெளியிடவில்லை. அதுவும் வந்தால் கடத்தல்களின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், போதைப் பொருட்களின் மதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: உடல் எடை குறைப்பு சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.