ETV Bharat / state

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை! - Puducherry youth died

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 8:53 PM IST

Puducherry youth died: உடல் எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதராத்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞர் மற்றும் தனியார் மருத்துவமனை புகைப்படம்
உயிரிழந்த இளைஞர் மற்றும் தனியார் மருத்துவமனை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: உடல் எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த ஏப்ரல் 12, 2023 அன்று பாண்டிச்சேரியைச் சார்ந்த செல்வநாதன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன் என்பவருக்கு உடல்பருமன் சிகிச்சைக்காக மருத்துவர் பெருங்கோவைச் சந்திந்து ஆலோசனை பெற்றுள்ளார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் பெருங்கோவைச் சந்தித்தபோது, அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 8 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், பம்மல் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டால், 4 லட்சம் ரூபாய் ஆகும் என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பெருங்கோ மேற்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஏப்.21ஆம் தேதி அன்று காலை 11.15 மணியளவில், பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமச்சந்திரன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, 22ஆம் தேதி 8.45 மணியளவில் நோயாளி அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர் பெருங்கோவால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, காலை 9.45 மணியளவில் நோயாளிக்கு திடீரென இதயத்துடிப்பு நின்றதால்,

முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 1 மணிநேரம் தாமதமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நோயாளி மாற்றப்பட்டுள்ளார். அங்கு நோயாளிக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏதும் இன்றி, ஏப்.23 அன்று இரவு 9.05 மணியளவில் நோயாளி இறந்துள்ளார்.

இந்நிகழ்வில், நோயாளியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் அறிவுரையின்படி, மருத்துவ ஆய்வுக் குழுவானது மே 3 அன்று பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

இதில் நோயாளியின் பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்கு முன் முறையாக ஒப்புதல் படிவம் பெறப்படவில்லை என்பதும், தகுதியில்லா செவிலியர்களைக் கொண்டு அறுவை சிகிச்சை அரங்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சையின் போது ICU மருத்துவர்கள், General Physician, Cardiologist பணியில் இல்லாததும், உயர்தர மருத்துவ உபகரணங்கள் (ECMO) இல்லாததும் மற்றும் நோயாளியைக் காலதாமதமாக மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதிச் (TNCEA) சான்றிதழ் தற்காலிகமாக நீக்கம் செய்தும் மற்றும் மருத்துவமனையை மூடுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் பெருங்கோ மீதும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற மருத்துவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாங்கனி நகருக்கே மாம்பழம் வரத்து குறைவு.. கிடுகிடுவென ஏறிய விலை உயர்வால் வியாபாரம் மந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.