ETV Bharat / state

“அதிமுகவைக் கண்டு இலங்கை அரசுக்கு பயம் இருந்தது” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 4:56 PM IST

Etv Bharat
Etv Bharat

Former Minister Jeykumar: பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு மக்களைப் பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும் என்றும், சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும், அதை அதிமுக எதிர்க்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், வைகைச்செல்வன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நத்தம் விஸ்வநாதன், “அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அறிக்கையாக உள்ளது. மீனவர், நெசவாளர், சிறு மற்றும் குறு தொழில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சங்கத்தினரிடம் கேட்டு, இந்த தேர்தல் அறிக்கையானது முழுமையாக வெளியிடப்பட உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” என தெரிவித்தார்.

மகத்தான கூட்டணி அமையும்: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவிற்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓ.பன்னீர்செல்வம் செய்து வருகிறார். தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைந்து விடுவார். பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில், பெரிய கூட்டணியாக மகத்தான கூட்டணி அமையும்.

கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக: தமிழகத்தில் பாஜக இல்லாத கூட்டணிதான் அமையும். பாஜக தவிர்த்து, யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. யார் கதவையும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை. அதிமுகவை நோக்கிதான் கட்சிகள் வரும். திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். இதற்கு முன்பெல்லாம் ஒரு நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு மனுக்களைப் பெற்று வந்தனர்.

அதிமுகவை ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்குவதைப் பார்த்து, தற்போது திமுகவும் அதை செய்து வருகிறது. மக்கள் எங்களுக்கு மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக, அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது? அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக. எல்லை தாண்டி மீன் பிடித்தது தொடர்பாக குறைவானச் சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது.

அதிமுக எதிர்க்கும்: அதிமுகவைக் கண்டு இலங்கை அரசிற்கு பயம் இருந்தது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு, மக்களைப் பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும், அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்டத் திட்டங்களைக் கொண்டுள்ள இந்தியாவில், சட்டத்தை அனுமதிக்க முடியாது. அண்ணாமலையை பொறுத்தமட்டில், பல கருத்துகளை கூறி மாட்டிக்கொண்டு வருகிறார்.

அவரின் கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அதிமுகவை எதிர்க்கும் பட்சத்தில், திமுக பகையாளி, பாஜகவும் பகையாளி” என தெரிவித்தார். முன்னதாக கோயம்புத்தூர் அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், அதிமுகவில் புதியதாக இளைஞர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்சுணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக கட்சியின் சால்வை அணிவித்து, ரோஜா மலர் கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.

இதையும் படிங்க: “விஜயகாந்த் குறித்து பேசியதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.