ETV Bharat / state

உடல் எரிந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்.. நெல்லை ஜெயக்குமார் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - NELLAI JAYAKUMAR CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 12:43 PM IST

NELLAI JAYAKUMAR DEATH CASE: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து டார்ச் லைட் ஒன்று எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை ஜெயக்குமார் கடையில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சி தொடர்பான புகைப்படம்
நெல்லை ஜெயக்குமார் கடையில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சி தொடர்பான புகைப்படம் (Credit - ETVBharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே.பி.கே ஜெயக்குமார் தன்சிங் (60) மர்ம மரணம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 4ஆம் தேதி, தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு பாதி உடல் கருகிய நிலையில் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, 10 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவரது மரணம் குறித்து கூடுதல் தடயங்கள் சேகரிப்பதற்காக கோவை, மதுரையிலிருந்து தடயவியல் புலனாய்வுத் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து பழைய கத்தி கண்டெடுக்கப்பட்டது. அதனை புலனாய்வுத் துறை நிபுணர்கள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து டார்ச் லைட் ஒன்று எடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, கடந்த மே 2ஆம் தேதி இரவு ஜெயக்குமார் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் டார்ச் லைட் வாங்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. எனவே, இரவு நேரத்தில் அவர் டார்ச் லைட் வாங்க வேண்டிய அவசியம் என்ன? டார்ச் லைட் வைத்துக் கொண்டு அவர் தனியாக இருட்டு பகுதியில் எங்கேயும் சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது அவர் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் டார்ச் லைட் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே ஜெயக்குமார் உடல் எரிந்த இடத்தில் பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் பிரஸ் ஒன்றும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயக்குமார் வீட்டில் நடத்திய சோதனையில் அதே போன்ற மற்றொரு பிரஸ்சும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எனவே, அந்த இரண்டு பிரஸ்ஸையும் போலீசார் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அந்த பிரஸ்சில் கைரேகைகள் பதிவாகியுள்ளதா? அது போன்று பதிவாகி இருந்தால், அது யாருடைய கைரேகை என்பதையும் ஆய்வு செய்தனர். ஜெயக்குமார் உடல் கட்டப்பட்டு வாயில் பிரஸ்சால் திணிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தற்போது தெரிய வருகிறது.

மேலும், திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்கும், ஜெயக்குமார் வழக்கும் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. அதாவது, ராமஜெயமும் வாயில் துணியை திணித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். எனவே, அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மர்ம மரணங்களின் வழக்குகள ஆவணங்களையும் வாங்கி போலீசார் அதன் மூலம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடிவிபத்து:"மாவட்ட ஆட்சியரின் முடிவை வரவேற்கிறோம்" - பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் - SIVAKASI FIRECRACKER BLAST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.