ETV Bharat / state

பாபநாசம் அருகே குரங்கு தாக்கியதில் மூதாட்டி உள்பட இருவர் காயம்! - Monkey attack in Papanasam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:51 PM IST

Monkey attack in Papanasam: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே குரங்கு தாக்கியதில் மூதாட்டி உள்பட இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஊருக்குள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளைப் பிடிக்க வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் பெயர்ப்பலகை புகைப்படம்
பாபநாசம் பெயர்ப்பலகை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மிளா, காட்டுப்பன்றி மற்றும் அரியவகை குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இதில் வெள்ளமந்தி இன குரங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு, பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன.

மேலும், சில நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பாபநாசம் அருகேயுள்ள சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் ஆரோக்கியராஜ் என்பவரின் மகன் சுதாகர் (27), அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது சுவரில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று திடீரென சுதாகரை தாக்கியுள்ளது. மேலும், அருகேயுள்ள அம்பலவானபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கம் (62) என்பவர், வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, பின்னால் நின்றிருந்த குரங்கு தங்கத்தை தாக்கியுள்ளது. தற்போது இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், ஒருவரை குரங்கு தாக்கியதில் அவர் லேசான காயமடைந்தார். ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாபநாசம் அருகே உள்ள கோட்டைவிளை பகுதியில் ஒரு மாணவரை குரங்கு தாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, அடுத்தடுத்து பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதியில் குரங்குகள் பொதுமக்களை தாக்கும் சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருவதால், ஊருக்குள் சுற்றித் திரியும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நடுக்காட்டில் பைக்கை பந்தாடிய காட்டு யானை.. வைரலாகும் வீடியோ! - Elephant Kicked Bike Viral Video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.