ETV Bharat / state

பழங்கால கிணற்றை தாமாக தூர்வாரிய சூரிய மணல் கிராமத்தினர்! - water well renovation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 3:51 PM IST

Ariyalur: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பழங்கால கிணற்றை அரசு தூர்வராத நிலையில், கிராம மக்களே தாமாக முன்வந்து தூர்வாரியுள்ளனர்.

கிணற்றை தூர்வாரிய கிராம மக்கள்
கிணற்றை தூர்வாரிய கிராம மக்கள் (credits-ETV Bharat Tamil Nadu)

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பழங்கால கிணற்றை அரசு தூர்வராத நிலையில், கிராம மக்களே தாமாக முன்வந்து தூர்வாரிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் கிணற்று நீரைத்தான் வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

பழங்கால கிணற்றை தாமாக தூர்வாரிய சூரிய மணல் கிராமத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கிணற்று நீர் உடலுக்கு குளிர்ச்சியாகவும், குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதால் நம் முன்னோர்கள் அதனைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், நாகரீக வளர்ச்சி காரணமாக இன்றைய காலகட்டத்தில் பழங்கால கிணறுகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. தற்போது குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறுகளைப் பார்ப்பதற்கே அரிதாக உள்ளது. இப்படி உள்ள சூழ்நிலையில், சுமார் 50 ஆண்டு பழங்கால கிணற்றை மீட்பதற்காக ஊர் பொதுமக்கள் தாமாகவே முன்வந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் சூரிய மணல், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடிநீருக்காக இந்த கிணற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், இந்த கிணற்று நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால், கோடை காலத்தில் நீண்ட தூரம் சைக்கிளில் வந்துகூட குடிநீரை எடுத்துச் செல்வது இன்றளவில் வழக்கமாக உள்ளது என அக்கிராம மக்கள் தெரிவித்தனர். இப்படி பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால வெட்டக்கிணறு தோன்றியது முதல் இதுநாள் வரை தூர்வாரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, அக்கிராம மக்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இருப்பினும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஊற்று நீர் சரியாக ஊற்றெடுக்க முடியாமல், மிகவும் சுகாதாரமின்றி தண்ணீர் கலங்கலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் கவலையடைந்த பொதுமக்கள். கிணற்றை தூர்வார வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்த நிலையில், யாரும் கிணற்றைக் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கிராம மக்கள், குடிநீர் தேவையைக் கருதி பழங்கால கிணற்றை நாமே ஒன்று கூடி தூர்வாரினால் என்ன என்று தூர் வாரும் பணிகளைக் கையில் எடுத்துள்ளனர். இதன்படி, பழங்கால கிணற்றில் சாரம் அமைத்து, சுமார் 10க்கும் மேற்பட்டோர் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து, தூர்வாரும் பணிகளை உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டு, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: “20 செ.மீ வரை மழை பெய்தால் சமாளிக்கலாம்..” தலைமைச் செயலாளர் தகவல்! - Shivdas Meena Inspected

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.