ETV Bharat / state

'மு.க.ஸ்டாலினின் பிரதமர் கனவு நிறைவேறாது' - எடப்பாடி பழனிசாமி சூசகப் பேச்சு - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:01 AM IST

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

Edappadi Palaniswami: மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் கனவு இருப்பதாகவும்; அது நிறைவேறாது எனவும் கூறிய எடப்பாடி கே.பழனிசாமி, திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே கிடையாது எனக் குற்றம்சாட்டினார்.

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். இவர்களின் ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றது, அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்டம் கிடைத்தது. அந்த இரு தலைவர்களும் மண்ணில் தோன்றாமல் இருந்திருந்தால், ஏழைகள் ஏழைகளாகவே இருந்திருப்பார்கள்.

ஆனால், வீட்டு மக்களுக்காக வாழ்ந்த சில தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. ஒரே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலும், மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. இது போன்ற தலைவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது லட்சியம்.

பல்வேறு அனுபவம்மிக்க வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களித்து, நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை ஒழிக்க முயன்றார். அவர் அதற்காக எடுத்த முயற்சிகளும், திட்டங்களும் உங்கள் துணையால் தூள்தூளாக ஆக்கப்பட்டது.

அதிமுக தெய்வ சக்தி உள்ள இயக்கம். துரோகம் செய்தால் தானாகவே அழிந்து விடுவார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மக்களுக்காக என்ன செய்தார்கள் என மக்கள் கேட்கிறார்கள். தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை என்ற இந்த நான்கு தொகுதிகளை நன்றாக அறிந்தவன், நான்.

இப்பகுதிகளில் விவசாயம் மற்றும் வேளாண்மை நிறைந்த பகுதிகள். அதனால்தான், இங்குள்ள மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக நிறைவேற்றியது. நீர் மேலாண்மை திட்டம், குடிமராமத்து திட்டம் போன்றவற்றால், பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீரை முழுமையாக தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வழங்கிய அரசு அதிமுகதான்.

இப்பகுதி விவசாயிகள், கடந்த 50 வருடமாக அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக (Athikadavu-Avinashi Project) கோரிக்கை வைத்திருப்பதாக ஜெயலலிதா கூறினார். அதனால், ஆயிரத்து 652 கோடி ரூபாய் முழுமையாக மாநில நிதியில் இருந்து எடுத்து, அத்திட்டத்தை 85 சதவிகிதம் அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், மீதமிருந்த 15 சதவிகிதத்தை, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிடப்பில் போட்டு விட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திட்டம், மீண்டும் அதிமுக ஆட்சி மலர்கின்றபோது நிறைவேறும். இந்த திட்டத்தில் கூடுதலாக 32 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். தற்போது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 இடங்களிலும், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 இடங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு கூட்டத்திலாவது விவசாயிகளைப் பற்றி பேசினார்களா? விவசாயிகளைப் புறக்கணிக்கிற அரசு தான் திமுக. ஆனால், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கின்ற, அவர்களை பாதுகாக்கின்ற அரசு, அதிமுக. திமுக அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவதாக கூறினார்கள்; ஆனால், செயல்படுத்தவில்லை. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரைக்கு 2 கிலோ கொடுப்பதாக கூறியதும் வரவில்லை.

கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை. மாறாக மின்கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே 'கரண்ட் கட்' வந்துவிடும். கரண்டிற்கும் திமுகவிற்கும் அதிக நெருக்கம் உண்டு. அதிமுக ஆட்சியில் துறை வாரியாக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. ஆனால், திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே கிடையாது.

மு.க.ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். ஆனால், அங்கு அவர் போவதற்கு வழியில்லை" எனக் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ-கள் ஜெயகுமார், பண்ணாரி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எ.ன ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.