ETV Bharat / state

விழித்து பார்த்தால்தான் வெளிச்சம் தெரியும்; அதிமுகவை இருண்ட கட்சி என்ற விமர்சனத்திற்கு ஈபிஎஸ் பதிலடி! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 10:17 AM IST

Edappadi K Palaniswam
Edappadi K Palaniswam

Edappadi K Palaniswami: திமுக ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்ய அல்ல அதிமுக கொண்டு நல்ல திட்டங்களை நிறுத்துவதற்குத்தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

திருப்பத்தூர்: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று(செவ்வாய்கிழமை) திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு, அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும், ரத்து செய்து இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ரத்து செய்தவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனை தோல்வி. திமுக ஆட்சிக்கு வந்தது, மக்களுக்கு நல்லது செய்ய அல்ல; அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்துவதற்குத்தான்.

திருப்பத்தூர் மாவட்டம் பிரித்த பின்னர் ரூ.200 கோடியில் ஆட்சியர் அலுவலகமும், ரூ.60 கோடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் கட்டிக் கொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் வந்து அதைத் திறந்து வைத்துவிட்டார். அவர் பேசுகிறார், அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்று. கண்ணை மூடினால் இருண்ட மாதிரி தான் தெரியும். விழித்து பார்த்தால்தான் வெளிச்சம் தெரியும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு 'காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்' கொண்டு வந்தது எங்களைப் பார்த்த இருண்ட ஆட்சி என்று கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்து அதனை செயல்படுத்தினோம். இஸ்லாமிய மக்களை பொறுத்தவரையில், 'ரமலான்' மாதத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சிக்கு இலவசமாக அரிசி வாங்கி கொடுத்தோம்.நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை இலவசமாக கொடுத்தோம். இப்படியான பல திட்டங்களையும் நாம் கொடுத்துள்ளோம்" என்றார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தை பகுதியில் நடந்து சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அருகில் உள்ள பேருந்துநிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நடந்து சென்ற பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் நிவாரணம் எவ்வளவு? உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வழங்கிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.