ETV Bharat / state

"ஆம்பூரில் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் உள்ளது"- அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன? - DURAI MURUGAN ELECTION CAMPAIGN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 2:58 PM IST

DURAI MURUGAN ELECTION CAMPAIGN
DURAI MURUGAN ELECTION CAMPAIGN

Durai Murugan: இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவு ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் உள்ளது என ஆம்பூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

DURAI MURUGAN ELECTION CAMPAIGN

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டர்.

அப்போது பேசிய அவர், “ஆம்பூரில் உள்ள இஸ்லாமியர்கள் கட்சியை வளர்ப்பதில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அந்த நாகரீகத்தின் உச்சம் தான் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு நாகரீக உடன்பாடு இங்கு உண்டு. ஒரு முறை இந்து சமூகத்தினர் நகராட்சித் தலைவராக வந்தால், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நகராட்சித் தலைவராக வரவேண்டும், இப்படி ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இந்தியாவிலேயே எங்கும் கிடையாது.

இங்கு ஒருவருக்கு ஒருவர் ஒன்றாக இருப்பார்கள், இப்படித்தான் இந்தியாவும் இருந்தது. வாஜ்பாய் அரசு இஸ்லாமியர்களை வதைத்தது கிடையாது, அவர் பி.ஜே.பி ஆக இருந்தாலும், உருதில் கவிதை பாடுவார். இந்த நாட்டிலே பிறந்து, வளர்ந்து, இந்த மண்ணுக்கு அடியில் போகிறவன் யாராக இருந்தாலும் அவன் இந்தியக் குடிமகன், மதத்தால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் நாட்டால் இந்தியர்கள், மொழியால், தமிழர்கள். எனவே தொழுகின்ற தெய்வங்கள் மாறுபட்டு இருக்கலாம், அப்படி இருக்கும் போது எல்லோரும் சகோதரர்களாக கருத வேண்டும்.

வடநாட்டில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்கள், இஸ்லாமியர்கள் தொழுகை நேரத்தில் பாம்பு ஏறினாலும், கண்ணை திறக்க மாட்டான், ஈட்டி முனையில் நிறுத்தினாலும், ஈமான் மாற மாட்டான், அப்படி பட்டவன் தொழுது கொண்டிருக்கின்றான். அவனை காலால் எட்டி எட்டி உதைத்தார்களே இது என்ன நியாயம்? இந்த நாட்டின் குடிமகன் தானே அவனும்.

இப்படி ஒரு மதவெறி நடந்துவிட்டது என்று, உலகம் சுற்றும் பெரியவர் மோடி, நான் வருதப்படுகிறேன், இது அநாகரீகம் இதை செய்தவர்களை தண்டிக்கின்றேன் என்று சொல்லி இருந்தால், அந்த நாகரீகத்தை நான் வரவேற்று இருப்பேன். ஆனால், இதுவரையில் தொழுகை நடந்தியவனை காலால் உதைத்தானே அவன் மீது ஒரு சஸ்பென்ட் ஆர்டர் கூட செய்யவில்லை என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன். எனவே, இந்த நாகரீகமற்ற அரசாங்கத்திற்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்” என தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் முதல் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை.. பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்! - PMK MANIFESTO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.