ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறையா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 8:28 PM IST

9ஆம் வகுப்பு வரை தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கத் திட்டம்
9ஆம் வகுப்பு வரை தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கத் திட்டம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் 22ஆம் தேதி முடிவடைகிறது. அதே போல் 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தேர்வு 25ஆம் தேதி முடிவடைகிறது.

அதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற்று, மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி துவங்குகிறது. 27ஆம் தேதி வரையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் 16ஆம் தேதி வரையில் ஈடுபடவுள்ளனர். இதனையடுத்து 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலின் போது வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்படுவதுடன், ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கான பயிற்சியும் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும். இந்நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வினை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி பொதுத் தேர்வு முடிந்த உடன், அடுத்த 5 நாட்களில் 13ஆம் தேதிக்குள் தேர்வினை நடத்தி விடுமுறை அளிக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறையும், அரசும் ஆலோசித்து வருகிறது.

இதற்கான கால அட்டவணை தயார் செய்யப்பட்டு, விரைவில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் பள்ளிகளை ஜூன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு பள்ளிகளை திறக்கலாமா எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

இதையும் படிங்க: "தமிழகத்தில் 579 பதட்டமான பூத்கள்" - ராதாகிருஷ்ணன் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.