ETV Bharat / state

பிரதமர் மோடி கொடுத்த கேரண்டிகள் என்ன ஆனது? - டி.ஆர்.பாலு கடும் தாக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 7:18 AM IST

DMK mp tr balu said that Prime Minister Modi has not fulfilled any of the guarantees given
கொடுத்த எந்த உத்தரவாதத்தையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று திமுக எம்பி டிஆர் பாலு பேச்சு

DMK MP T.R.Baalu: பிரதமர் மோடிக்கு விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர விருப்பமே இல்லை எனவும், விவசாயத்திற்கு பட்ஜெட்டில் 2.67 சதவிகிதம்தான் ஒதுக்கி உள்ளார் என்றும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

கொடுத்த எந்த உத்தரவாதத்தையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று திமுக எம்பி டிஆர் பாலு பேச்சு

திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற பொதுக்கூட்டம், திருச்சி புத்தூர் பகுதியில் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அதில், "திருச்சி தொகுதியில் போட்டியிட நிறைய பேர் விருப்பப்படுகிறார்கள். அதற்கு காரணம், இங்கு நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதுதான். அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் படைத் தளபதியாக இருந்து திருச்சி மாவட்டத்தை வழிநடத்திச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க சின்னச்சாமி உயிர் நீத்தது திருச்சி மண்ணில்தான். மோடி பேசுவதை பாஜகவினர் கேரண்டி என கூறுகிறார்கள். 2014‌ஆம் ஆண்டு மோடி கொடுத்த கேரண்டிகள் என்ன ஆனது? கருப்பு பணத்தை ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் எனக் கூறினார். அதெல்லாம் என்ன ஆனது என நாம் கேட்க வேண்டும்.

2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எனக் கூறினார். ஆனால், இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அதை அவர்களிடம் கேட்க வேண்டும். பெட்ரோல் ரூ.35-க்கு தருவேன் என்றார். ஆனால், இன்று பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எல்லாமே பொய்தான். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர வேண்டும் என்கிற சாமிநாதன் குழு பரிந்துரையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

அதற்கு அப்போதைய குஜராத்தின் முதலமைச்சராக மோடிதான் இருந்தார். அவர் 2011ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே உணவு பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, அதை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது.

அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்ற பிறகு, விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்றாமல், மூன்று வேளாண் சட்டங்களைத்தான் நிறைவேற்றினர். அவருக்கு விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்டம் நிறைவேற்ற விருப்பமே இல்லை. பட்ஜெட்டில் 2.67 சதவிகிதம்தான் விவசாயத்திற்கு ஒதுக்கி உள்ளார்கள்.

இன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை தீவிரவாதிகள்போல் மத்திய பாஜக அரசு நடத்துகிறது. மன்மோகன் சிங் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.59, கேஸ் விலை ரூ.400 என விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும், பெட்ரோல் 102 ரூபாய்க்கும், கேஸ் ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரண்டி என கூறுபவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் 95 சதவிகித உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசு தரவில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை புறக்கணிப்பவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு கவுன்சிலருக்கும், அவர்கள் பகுதிக்கு உட்பட்ட மக்களை வாக்களிக்க வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் மிகப்பெரிய விரோதிகள். முதலமைச்சர் கடுமையாக வேலை செய்து வருகிறார். இவ்வளவு வேலை செய்ய வேண்டாம் எனக் கூறினாலும், அவர் கேட்க மாட்டேன் என்கிறார். முதலமைச்சருக்கு உறுதுணையாக நாம் இருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் கட்ட ரூ.2 ஆயிரம் கோடி பணம் இல்லை என்கிறார்கள். மதுரை எய்ம்ஸை ராமநாதபுரத்தில் நடத்துகிறோம் என்கிறார்கள்.

அது குறித்து கேள்வி கேட்டால், நாடாளுமன்றத்தில் பிரச்னை செய்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்தபோதே மானம், ரோசத்தை விட்டு விட்டேன். வெள்ள நிவாரணம் கேட்டு பிரதமரைச் சந்தித்தேன். எதிரிகளிடம் எப்படி பேச வேண்டும் என்பதை முரசொலி மாறன் எனக்கு கற்றுத் தந்துள்ளார். மோடியிடம் மனுக்களை 10 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம். அவரிடம் மனு கொடுத்து, போட்டோக்கு போஸ் கொடுத்தே போய்விட்டது. எதுவும் நடக்கவில்லை.

மோடியிடம் கொடுத்து நடக்கவில்லை என அமித்ஷாவிடம் சென்று மனு கொடுத்தோம். ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்பாக நிவாரண நிதி வழங்கப்படும் என்றார். ஆனால் வழங்கப்படவில்லை. அதனால் நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசினேன். வெள்ளம் ஏற்பட்டபோது பாதுகாப்புத் துறை அமைச்சர், நாட்டின் பிரதமரை பாராட்டுகிறேன் எனப் பேசத் தொடங்கினேன். அதை கூறிய உடன் எல்.முருகன் எழுந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

எல்.முருகன் அதற்கு பதில் சொல்லக் கூடாது, உள்துறை அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கூறினேன். அதற்குள் வேறு ஒருவர் எழுந்து எல்.முருகன் சாதியை பாலு குறிப்பிட்டு விட்டார் என்றார். 1996-இல் பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக நான் இருந்தபோது, ஒரு இயக்குநராக தலித் இளைஞர் பணியாற்றினார். அவரை இணை செயலாளராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினேன், அவரும் நியமிக்கப்பட்டார்.

இந்திய வரலாற்றிலேயே மத்திய அரசில் தலித்தை இணைச் செயலாளராக நியமித்தது அதுதான் முதல் முறை. என்னை தலித்தை இழிபுப்படுத்தி விட்டதாக கூறுகிறார்கள். சமூக நீதி பற்றி கற்றுக் கொடுத்ததே திமுகதான். பொது வெளியில் திமுகவை அவமானப்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்கு சாதி, மதம் கிடையாது. தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்கள்தான் என்னை எம்.பி-யாக தேர்ந்தெடுத்தார்கள்.

பாஜக கொடுத்த கேரண்டிகளில் ஒன்று சேது சமுத்திர திட்டம். வாஜ்பாய் அதற்கு கையெழுத்திட்டார். 23 கி.மீ மீதமிருந்த நிலையில் ஜெயலலிதா, பாஜகவினர் நீதிமன்றம் சென்றார்கள். அதனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. இன்று நீதிமன்றமே அது பாலமில்லை எனக் கூறிவிட்டது. தற்போது அதை நிறைவேற்ற வேண்டியது மோடிதான். அவர் நிறைவேற்ற மறுக்கிறார். 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது கரோனா காலக்கட்டத்தில் ரூ.4 ஆயிரம் வழங்கினார்.

மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து 22 லட்சத்திற்கு மேல் ஜி.எஸ்.டி வரியை செலுத்தி உள்ளார்கள். ஆனால், மத்திய அரசு மீண்டும் தந்தது, ஐந்து மாநிலத்திற்கும் சேர்த்து 6 லட்சம்தான்.

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களில் 4.81 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் வாக்காளர்கள் 6.20 கோடி பேர் உள்ளார்கள். இதிலிருந்தே யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்து விட்டது" என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.