ETV Bharat / state

பிரிந்து கிடக்கும் ஸ்டிக்கர்கள்.. அதிமுக, பாஜகவை விளாசிய திமுக எம்பி கனிமொழி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:36 AM IST

திமுக எம்பி கனிமொழி
திமுக எம்பி கனிமொழி

DMK MP Kanimozhi: தமிழகத்தில் அதிமுக, பாஜக என்று இரு ஸ்டிக்கர்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டு ஸ்டிக்கர்களும் பிரிந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு இரு ஸ்டிக்கர்களும் ஒட்டிக்கொள்ளும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் தி.மு.க. சார்பில், 'எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது, “ தமிழக மக்களின் தந்தையாக உள்ள பெரியார் மண்ணில் பேசுவது பெருமை. அரசியலை மதத்தோடு இணைத்து மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கு தந்தை பெரியார் சிம்ம சொப்பனமாக உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்லூரி படிப்பை படிக்க, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைபெண் திட்டம் கொண்டு வந்தார்.

ஒன்றியத்தில் உள்ள ஆட்சி மதத்தை வைத்து ஒருவருக்கொருவர் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என்று விரோதத்தை தொடர்ந்து உருவாக்கி, அரசியல் செய்து வருகிறார்கள். இது மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மணிப்பூரில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று வரை நீதி கிடைக்க வில்லை. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்லவில்லை. ஆனால், தற்போது தமிழகத்திற்கு வருவதற்கு அவருக்கு நேரம் உள்ளது. இதற்கு காரணம் தேர்தல்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் அவருக்கு வாக்குகள் கிடைக்காது. திமுகவை பார்த்து மத விரோதிகள் என்று கூறுகின்றனர். ஒவ்வொருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் இந்துகளாக உள்ளனர். இதில், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிம் இடஒதுக்கீட்டுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக தமிழக மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தால், மாணவர்கள் படிக்க கூடாது என்ற வகையில் நீட் போன்ற நுழைவு தேர்வு கொண்டு வந்துள்ளனர்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாத வகையில், இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், திமுக உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் வாக்குறுதியில், ஜவுளி தொழிலை மேம்படுத்த மிகப்பெரிய பூங்கா அமைக்கப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை பூங்கா அமைக்கவில்லை.

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், மத்திய அரசு கால் சதவீதம் கொடுக்கும் நிலையில், முக்கால் சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. ஆனால், அதற்கு பிரதமர் மோடி ஸ்டிக்கர் ஒட்டுகிறார். தமிழகத்தை பொறுத்தவரை இரு ஸ்டிக்கர் உள்ளது. ஒன்று பாஜக, மற்றொன்று அனைத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுக. தேர்தலுக்காக இரண்டு ஸ்டிக்கர்களும் பிரிந்துள்ளது. தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாஜக இரு ஸ்டிக்கர்களும் ஒட்டிக்கொள்ளும்.

உலகத்தில் மிகப்பெரிய ஊழல் என்பது தேர்தல் பத்திரம் தான். இதில் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று தெரியாது. தேர்தல் பத்திரம் மூலம், மற்ற அரசியல் கட்சிகளை விட மூன்று மடங்கு பாஜக தேர்தல் பத்திரம் பெற்றுள்ளது. உச்சநீதிமன்றம், இந்த சட்டம் செல்லாது என்று கூறியுள்ள நிலையில், யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்பதை சொல்வதற்கு பாஜக முன்வரவில்லை. ஊழலுக்கு புதிய வழிமுறைகள், பாடங்கள், சட்டங்களை சொல்லி தரும் கட்சி தான் பாஜக. நாட்டை பிளவு படுத்தும் கட்சிக்கு இந்த நாட்டில் இடம் இல்லை என்ற பாடத்தை சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கென்யாவிற்கு சென்ற ஜாபர் சாதிக்..! உடன் சென்றவர்கள் யார்? பட்டியலைத் தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.