ETV Bharat / state

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; "நாடு விரைவில் பாஜகவை தூக்கி எறியும்" - கனிமொழி எம்பி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 7:23 AM IST

Updated : Feb 17, 2024, 9:03 AM IST

kanimozhi speech
கனிமொழி எம்பி விமர்சனம்

Kanimozhi MP: நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டது, நாடும் விரைவில் பாஜகவை தூக்கி எறியும் என திமுக எம்பி கனிமொழி, உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி பேச்சு

திருநெல்வேலி: திமுக சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், "இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள்" என "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில், நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை கூட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவிலும், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் புதிய திட்டத்திற்கு புரியாத மொழியில் பெயர் வைக்கப்படுகிறது. எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. சட்டத்திற்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பெயர்கள் வைக்கப்படுகிறது.

திருக்குறளை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று பிரதமர் பேசுகிறார். ஆனால், அது யாருக்கும் புரியவில்லை. பழமையான மொழி தமிழ் என ஒவ்வொரு இடத்திலும் பிரதமர் சொல்வதாக பாஜகவினர் சொல்கின்றனர். அது எங்களுக்கும் தெரியும். பாஜக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பழமையான மொழிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. தென்னாட்டுக்கு எதிராக ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

தென்னாட்டை கட்டுக்குள் கொண்டுவர பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் வகையில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஜிஎஸ்டி வரி மூலம் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு 29 பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 பைசா என, அதனை இரு மடங்காக்கி வட்டியுடன் கொடுக்கின்றனர். கேட்டால், முன்னேற வேண்டிய மாநிலம் உத்தரப் பிரதேசம் என சொல்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக பாஜக ஆட்சியில் இருக்கும்போது, ஏன் முன்னேறிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறவில்லை என்பதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். பல தடைகளை மத்திய அரசு செய்தும், நிதி போதுமானதாக ஒதுக்காமல் இருந்தும், தமிழ்நாட்டை பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார்.

சென்னை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தும், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அழிவை மக்கள் சந்தித்துள்ளனர். சென்னை பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் ராஜநாத் சிங் வந்தார். தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். மத்திய நிதியமைச்சர் கோயிலைச் சுற்றி சகதி இருக்கிறது, அர்ச்சகருக்கு சம்பளம் இல்லை என்ற கவலை மட்டுமே ஏற்பட்டது.

ஜிஎஸ்டியால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வெள்ளத்திலும் பல மடங்கு பாதிக்கப்பட்டனர். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது அக்கறை இல்லாமல் நிதி அமைச்சருக்கு குருக்கள் மீது மட்டுமே அக்கறை ஏற்பட்டது. இதுவரை மத்திய அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படியே, தமிழக அரசின் நிதி மூலம் மக்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கி உள்ளது.

பாஜக நேர்மை, நியாயம் என பேசிக் கொண்டிருந்ததை நீதிமன்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவு மூலம் உடைபட்டுவிட்டது. 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திர நடைமுறையை பாஜக கொண்டு வந்தது. இதுவரை பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் சுமார் ரூ.6,564 கோடி கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளின் மொத்த கணக்கை கூட்டினால் கூட இந்த தொகை வராது. மத்திய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை, நிறைவேற்றப் போவதுமில்லை.

பாஜக அறிவித்த ரூ.15 லட்சம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. நாட்டிற்கே உணவு அளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தும் ஆட்சிதான் மத்தியில் உள்ளது. சமய நல்லிணக்கம் என எதையும் பற்றி கவலைப்படாமல், மத அரசியல் செய்துதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். கிராமத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு நல்ல திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்.

அதற்கு முறையாக நிதி ஒதுக்காமல் போதுமான வேலை, போதுமான ஊதியம் உள்ளிட்டவைகள் பாஜக அரசால் கொடுக்கப்படாமல் உள்ளது. சாதாரண மக்களுக்கு நல்ல திட்டம் என்றால், அது பாஜகவிற்கு பிடிக்காது. பெரும்பான்மையான மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் எதிரான ஆட்சியே பாஜகவின் ஆட்சி, இந்திய இறையாண்மை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு எதிரானது, பாஜக ஆட்சி.

இந்திய கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும், நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டது, நாடும் விரைவில் பாஜகவை தூக்கி எறியும். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாளே, இந்தியா வெற்றி அடையும் நாளாகும். பாஜகவின் வெற்றி, நாட்டின் தோல்வி என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "கடந்த ஆறு மாதமாக தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பினை ஜிஎஸ்டியில் நாம் இழந்திருக்கிறோம். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம், நாம் வரி விதிக்கும் உரிமையையும் இழந்திருக்கிறோம். நம்மிடம் வரி விதிக்கும் உரிமை இல்லை. பாஜகவின் ஆட்சியால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் ஒரே தலைவராக மு.க ஸ்டாலின் உள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?

Last Updated :Feb 17, 2024, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.