ETV Bharat / state

தென் சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயவர்தனன், தமிழச்சி மற்றும் தமிழிசை.. - South Chennai Candidates Nomination

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 5:31 PM IST

South Chennai Candidates Nomination: தென் சென்னையில் போட்டியிடுகின்ற திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று (மார்ச்.25) தாக்கல் செய்துள்ளனர்.

South Chennai Candidates Nomination
South Chennai Candidates Nomination

சென்னை: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பாகக் கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன், தற்போது தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த முறை பாஜக சார்பாகத் தென் சென்னை தொகுதியில் போட்டியிடக் களமிறங்கியுள்ளார்.

மேலும், கடந்த 2014 முதல் 2019 வரை தென் சென்னை மக்களவை உறுப்பினராக இருந்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனன் இந்த முறையும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் நட்சத்திரத் தொகுதியாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில், தென் சென்னையில், திமுக சார்பில் போட்டியிடுகின்ற தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பாகப் போட்டியிடுகின்ற முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அதிமுக சார்பாகப் போட்டியிடுகின்ற ஜெயவர்த்தனன் ஆகியோர் இன்று காலை (மார்ச் 25) தங்களுடைய வேட்புமனுக்களைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்போது, வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வந்த திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்ததும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதிமுக, விசிக, புதிய தமிழகம் சின்னம் விவகாரம்: சத்யபிரதா சாகுவின் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.