ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல்; அதிமுக கூட்டணி குறித்து எப்போது அறிவிக்கும்? - ஜெயக்குமார் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 3:50 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

AIADMK former Minister Jayakumar: திமுக மற்றும் பாஜக தவிர யாரும் எங்களுக்கு எதிரிகள் இல்லை, அந்த கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

டி ஜெயக்குமார் பேட்டி

சேலம்: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம், நேற்று சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அறிக்கை தயாரிப்புக் குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன் பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டங்களாகச் சென்று நேரடியாக மக்களின் நலன், மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் திமுகவால் தாரைவார்க்கப்பட்டதை மீட்கும் வகையில் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரியப்படுத்துவதற்கு நிறைய நேரம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதிமுக தலைமையில் எந்தெந்த கூட்டணி கட்சிகள் உள்ளது என்பது குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவிப்பார்.

இதையும் படிங்க: அதிமுக யார் யார் உடன் கூட்டணி வைக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய நிபந்தனை!

ஓபிஎஸ்-ம், தினகரனும் இணைந்துகொள்ளட்டும். இருவரும் தொண்டர்களாலும், பொதுமக்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்களின் கூட்டணி, அதிமுகவிற்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாது. திமுக மற்றும் பாஜகவைத் தவிர யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது, உரிய நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" எனக் கூறினார்.

ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அடிப்படையில் அதிமுகவில் இல்லாதவர் என்றும், அப்படி கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர் பேசுவதை உளறல், பிதற்றல் என்று எடுத்துக் கொள்ள முடியும் என்று விமர்சித்துப் பேசினார்.

பின்னர் திமுகவில் எப்போது குழப்பம் வரும் என்று அதிமுக காத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "எங்களுக்கு அது அவசியம் அற்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது திமுகவிற்கு கைவந்த கலை. நாங்கள் தொண்டர்களையும், பொதுமக்களையும்தான் நம்பி இருக்கிறோம். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என பேசினார்.

இதையும் படிங்க: “திமுக எப்படியோ அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி” - டிடிவி தினகரன் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.