ETV Bharat / state

வேட்டைக்காரன் கோவில் திருவிழா.. ஆண்கள் மட்டுமே அடித்து நொறுக்கிய கறிவிருந்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 3:38 PM IST

dindigul-uluppagudi-vettaikaran-temple-festival
வேட்டைக்காரன் கோவில் திருவிழா 3000 ஆண்களுக்கு விருந்து

Vettaikaran Temple Festival: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது.

வேட்டைக்காரன் கோவில் திருவிழா 3000 ஆண்களுக்கு விருந்து

திண்டுக்கல்: திருவிழாக்களுக்கு பெயர் போன தமிழ்நாட்டில் பல்வேறு வினோதமான திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா என வினோதமான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஒரு வினோத வழிபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. அதன் படி, இந்த ஆண்டிற்கான கோயில் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக துவங்கியது.

கோயில் திருவிழாவையொட்டி ஆடுகள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும். இவ்வாண்டிற்கான திருவிழாவையொட்டி, இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு, மட்டன் வறுவல், மட்டன் குழம்பு என வகைவகையாக சமைக்கப்பட்டன.

மேலும், சுமார் 100 மூட்டை அரிசியில் சுட சுட சாதம் தயாரானது. இந்த கறி விருந்து விழாவையொட்டி, அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது. இந்த கறி விருந்தில் நத்தம், புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழா குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “வேட்டைக்காரன் என்பவர் 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாவீரன் ஆவார். இவரைத்தான் நாங்கள் தெய்வமாக பூஜிக்கிறோம். அவரின் கல்வெட்டு இங்குதான் உள்ளது. இதில் தமிழ் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறையிலிருந்து உறுதிப்படுத்தியுள்ளார்கள். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இதனைப் பார்வையிடலாம்.

இந்த கோயில் திருவிழாவின்போது, இரவு உணவு சமைத்து, அதை காலையில் பிரசாதமாக வழங்குவோம். இந்த உணவை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடுத்துச் செல்வர். வேட்டைக்காரன் கோயிலில் ஒரு கோரிக்கை வைத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்பது எங்களின் நம்பிக்கை" என்றார்.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை வழக்கு; கூலிப்படை ஏவி கொலை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.